கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி படுகாயம் 1½ வயது குழந்தை பலி


கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி படுகாயம் 1½ வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

பாணாவரம் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர். 1½ வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பனப்பாக்கம்,

பாணாவரத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது 32), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லாவண்யா (27). இவர்களுக்கு 1½ வயதில் தன்சிகா என்ற பெண் குழந்தை உண்டு. கோபியின் உறவினர் இல்ல திருமண விழா நேற்று முன்தினம் சோளிங்கரில் நடந்தது. அதில் கோபி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று விட்டு, தனது மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

பாணாவரத்தை அடுத்த ஆயல் கிராமம் அருகே வரும்போது அந்த வழியாக பாணாவரத்தில் இருந்து சோளிங்கரை நோக்கி வந்த ஒரு கார், அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது திடீரென மோதியது. அதில் 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

குழந்தை சாவு

அங்கு 3 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் குழந்தை தன்சிகா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கணவன், மனைவி இருவரும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மீது மோதிய கார் டிரைவர் பாணாவரத்தை அடுத்த சூரை கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (34) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story