குவாரி நீரில் தனியார் நிறுவன ஊழியர் மூழ்கினார் 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்


குவாரி நீரில் தனியார் நிறுவன ஊழியர் மூழ்கினார் 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Jun 2017 3:19 AM IST (Updated: 6 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் அருகே குவாரி நீரில் தனியார் நிறுவன ஊழியர் மூழ்கினார். அவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் சரகத்துக்கு உட்பட்டது நெடுங்கூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் வசித்தவர் லட்சுமணன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு செந்தாமரை என்கிற மனைவியும், 2 மகள்களும், ராமலிங்கம்(வயது 26) என்ற மகனும் உள்ளனர். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள ராமலிங்கம், பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் அவ்வூரில் உள்ள கல்குவாரி நீரில் குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் ராமலிங்கம் சென்றார். குளித்துவிட்டு அவரது நண்பர்கள் கரையேறிய நிலையில் ராமலிங்கம் மட்டும் கரையேறவில்லை. அவரை நண்பர்கள் மற்றும் அங்கு குளித்துக்கொண்டிருந்த மற்றவர்களும் தேடிப்பார்த்தனர். நீண்டநேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ராமலிங்கத்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேடும் பணி தீவிரம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் புள்ளம்பாடி, பெரம்பலூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் கல்குவாரி நீரில் இறங்கி ராமலிங்கத்தை தேடினர். மாலை வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது இருட்டி விட்டதால் அத்துடன் தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 2-வது நாளாக ராமலிங்கத்தை தேடினர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட நெடுங்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் குவாரியின் அருகே திரண்டு நின்று சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். நேற்று மாலை வரை ராமலிங்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Related Tags :
Next Story