குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள்


குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் தரகம்பட்டி அருகே தேவர்மலை அருகே குடிவண்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆழ்குழாய் கிணறு மூலம் தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்ததாகவும், கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வினியோகிக்கவில்லை எனவும், பக்கத்து கிராமத்திற்கு சென்று தினமும் குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலை இருப்பதால் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

இதேபோல அதியமான்கோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் திரண்டு வந்திருந்து மனு கொடுத்தனர். அதில், தங்கள் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், குடிநீர், தார்ச்சாலை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

செம்பாரைப்பட்டி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், அரவக்குறிச்சி அருகே துக்காச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்தனர்.

வேப்பிலை மாலை அணிந்தபடி...

இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மணி தலைமையில் நிர்வாகிகள் சிலர், வேப்பிலை மாலை அணிந்த படியும், கையில் மண் சட்டி ஏந்தியபடியும் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்ற அரிசி, கம்பு, கேழ்வரகு போன்றவற்றை அரசு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.

தோகைமலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகவேல் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். உயர்நிலை கல்வி படிக்க அருகில் உள்ள கிராமத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் பாதிபேர் பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். எனவே நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கல்வி கட்டணம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில், கல்வி, பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் ரவிநாத் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

அதில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை வெளிப்படையாக பள்ளிகள் முன்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கூறியிருந்தனர்.

கழிவு நீர்

செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இந்திய குடியரசு கட்சி (அம்பேத்கர்) நிர்வாகிகள் சிலர் கையில் பாட்டிலில் கலங்கலான நீருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அந்த பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதாகவும், அதனால் பாதிப்பு ஏற்படுவதாகவும், நடவடிக்கை கோரி மனு கொடுத்தனர். விவசாயிகள் கழிவு நீர் கலந்த நீரை பாட்டிலில் கொண்டு வந்த போது அதனை போலீசார் சோதனையிட்டு உள்ளே கொண்டு செல்ல அனுமதித்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.


Related Tags :
Next Story