தேசிய அளவில் வெற்றி பெற்று சர்வதேச கராத்தே போட்டிக்கு மானாமதுரை வீரர்கள் தேர்வு


தேசிய அளவில் வெற்றி பெற்று சர்வதேச கராத்தே போட்டிக்கு மானாமதுரை வீரர்கள் தேர்வு
x
தினத்தந்தி 6 Jun 2017 3:30 AM IST (Updated: 6 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை வீரர்கள் 2 பேர் சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வெள்ளையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமாரியப்பன் மகன் விஸ்வஹரி(வயது 14). இவர் மானாமதுரையில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்துள்ளார். சிறுவயது முதலே தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியில் ஆர்வம் கொண்டு விளையாடி வருகிறார். மாவட்ட, மண்டல, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற விஸ்வஹரி தேசிய அளவிலான கராத்தே போட்டியில் விளையாட தகுதி பெற்றார். இதனையடுத்து கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த 15 வயதிற்கு உட்பட்டோருக்கான கராத்தே போட்டியில் அவர் கலந்துகொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய விஸ்வஹரி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

இதேபோல் மானாமதுரையைச் சேர்ந்த பெருமாள்(24) என்பவரும் கராத்தே போட்டியில் மாவட்ட, மாநில போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். பெருமாளும் தனது சிறப்பான செயல்பாட்டால் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு பெற்றார். இவர் தனக்குரிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

சர்வதேச போட்டிக்கு தகுதி

முன்னதாக தேசிய கராத்தே போட்டியில் இந்தியாவில் உள்ள 25 மாநிலங்களைச் சேர்ந்த 700–க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். மற்ற மாநிலங்களில் இருந்து 20 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்ட நிலையில், தமிழகத்தில் இருந்து 5 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்களில் விஸ்வஹரி மற்றும் பெருமாள் ஆகியோர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதக்கம் வென்ற விஸ்வஹரி மற்றும் பெருமாள் தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து சர்வதேச போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளனர். பதக்கம் வென்றதுடன் மானாமதுரைக்கு பெருமை சேர்த்த வீரர்களை பயிற்சியாளர் நாகராஜன், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் பாராட்டினர்.


Next Story