சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்


சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:15 AM IST (Updated: 6 Jun 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

விழாவின் 11-வது நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறப்பு, சிறப்பு பணிவிடை போன்றவை நடந்தன. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் அய்யா தேருக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது.

திரளான பக்தர்கள் தரிசனம்

காவி உடை, தலைப்பாகை அணிந்து திரளான அய்யாவழி பக்தர்கள் தேர் இழுத்து தரிசனம் செய்தனர். தேர் தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி வழியாக பகல் 2 மணிக்கு தலைமைப்பதி வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் பழம், பூ, தேங்காய், எலுமிச்சை போன்ற பொருட்களை சுருளாக படைத்தனர். மாலையில் தேர் நிலைக்கு வந்தது. முன்னதாக தேரின் முன்பாக காவி கொடி ஏந்தியும், முத்துக்குடை பிடித்தும் தேரின் முன்பு பக்தர்கள் சென்றனர். தேரோட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தலைமைப்பதியின் கிழக்கு வாசல் அருகில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் காலை, மதியம், இரவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ரிஷப வாகனத்தில் உலா

இரவில் அய்யா ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி, சமய மாநாடு, பக்தி இசை போன்றவை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 6.30 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.


Related Tags :
Next Story