பள்ளி திறந்த ஒரு மணி நேரத்திற்குள் பாடப்புத்தகம் வினியோகம் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


பள்ளி திறந்த ஒரு மணி நேரத்திற்குள் பாடப்புத்தகம் வினியோகம் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 6 Jun 2017 3:45 AM IST (Updated: 6 Jun 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி திறந்த ஒரு மணி நேரத்திற்குள் பாடப்புத்தகங்கள் வினியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை,

கோடை விடுமுறைக்கு பின்னர் நாளை(புதன்கிழமை) பள்ளிகள் திறக்க உள்ளன. இதற்கிடையே, பள்ளிகள் திறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், பள்ளிகளில் தினமும் இறைவணக்கம் பாட வேண்டும். நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பள்ளி திறந்த ஒரு மணி நேரத்திற்குள் வினியோகம் செய்ய வேண்டும். சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளைத்தவிர அனைவருக்கும் மடிக்கணிணி விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

போட்டி

அதேபோல, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி திறந்த ஒரு வாரத்திற்குள் மாணவ,மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும். புதிதாக சேர்ந்துள்ள மாணவ,மாணவிகளுக்கான இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story