நான் ரப்பர் ஸ்டாம்பு போல செயல்பட வேண்டுமா? நாராயணசாமிக்கு, கிரண்பெடி கேள்வி


நான் ரப்பர் ஸ்டாம்பு போல செயல்பட வேண்டுமா? நாராயணசாமிக்கு, கிரண்பெடி கேள்வி
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

நான் ரப்பர் ஸ்டாம்பு போல செயல்பட வேண்டுமா? என்று கிரண்பெடி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரி,

முதல்–அமைச்சர் நாராயணசாமியின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சர் தற்போது என்ன விரும்புகிறார்? நான் ரப்பர் ஸ்டாம்பு போல செயல்பட வேண்டுமா? சிறந்த நிர்வாகியாக இருக்கவேண்டுமா? என்பதுதான் தற்போதைய கேள்வி? பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் தவறுகள் நடக்க அனுமதிக்கப்படுகிறது. எந்த விளக்கமும் பெறாமல் கோப்புகளுக்கு அனுமதி தரவேண்டுமா?

சுயலாபத்துக்காக தங்கள் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப வேண்டியவர்களை பொறுப்புகளில் நியமிப்பதுதான் பணியா? பட்ஜெட்டில் நிதி ஒதுக்காவிட்டாலும் திடீரென கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்க வேண்டுமா? இதற்காக கடன் வாங்கி செலவழிக்க வேண்டுமா?

சலுகைகளை அனுபவிப்பவராக...

தகுதியும், செயல்திறனும் இல்லாத அதிகாரிகளுக்கு பணியிடங்கள் இல்லாத நிலையிலும் பதவி உயர்வு தரவேண்டுமா? தைரியமாக, நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டுமா? எதையும் பார்க்காமல், எதையும் பேசாமல், வெறும் பார்வையாளராக கவர்னர் மாளிகையில் கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பவராக கவர்னர் இருக்க வேண்டுமா?

மக்களை சந்திக்காமல், அதிகாரிகளை கேள்வி கேட்காமல் தனித்து இருக்க வேண்டுமா? ஆட்சியாளர்கள் கூறுவதை பேசாமல் செயல்படுத்த வேண்டுமா? இதற்காக முதல்–அமைச்சரிடம் இருந்த பல கடிதங்கள் வந்துள்ளன. முதல்–அமைச்சருக்கு என்ன வேண்டும் என்றால் ஏற்கனவே பெற்ற நிதியை முறையாக செலவழிக்காத நிலையில் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி கிடைக்கவேண்டும்.

என்னதான் வேண்டும்?

வருவாய் ஈட்டும் சுற்றுலாத்துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது. இதுதான் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயல்படுவது என்பது? புதுச்சேரி நிர்வாகத்தில் நிலவும் தேக்க நிலையை சீரமைக்க ஒருவர் (கவர்னர்) உள்ளார், அவரது உதவியை பெறலாம் என்ற உண்மையை உணராமல் உள்ளனர்.

நான் மாநிலத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நல்ல நிர்வாகத்துக்கு உதவி புரியவும், அரசின் சக்தியை பலப்படுத்துவதாகவும் உள்ளேன் என்பதை அவர்கள் அறியவில்லை. இதனால் முதல்–அமைச்சருக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

நீதியை எதிர்நோக்கி...

யூனியன் பிரதேச சட்டத்தின்படி கவர்னர், முதல்–அமைச்சர் ஆகிய இருவருக்கும் பொறுப்புகளும், கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் சூழ்நிலையை அவர் எதிர்கொள்ள தயாராக இல்லை. பொதுமக்களும், மாணவர்களும் நீதியை எதிர்நோக்கி உள்ளனர்.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி மாணவர்சேர்க்கையை எதிர்நோக்கி கதறலுடன் காத்துள்ளனர். யார் அவர்களது கோரிக்கைக்கு செவிசாய்ப்பது? நீதிமன்றங்கள்தானா? நாள்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்கும் கவர்னர் மாளிகைதான் அவர்களது கடைசி நம்பிக்கையாக உள்ளது.

பார்வையாளர்களால்...

புதுவை மாநிலத்துக்கு சிறந்த நிர்வாகம், ஒருங்கிணைப்பு, நேர்மை, நீதி தேவைப்படுகிறது? இது எவ்வாறு கிடைக்கும்? யார் இவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்? வெறும் பார்வையாளர்களால் இதை செய்ய முடியாது. புதுவை மக்களுக்காக இதயம் துடிப்பவரால் மட்டுமே முடியும். சுயநலமின்றி பணிபுரியும் ஒருவரால்தான் முடியும். பதவிகளுக்கு முன்பு மக்களின் நலனை முன்னிறுத்துபவரால் மட்டும்தான் முடியும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.


Next Story