கவர்னரை மாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்


கவர்னரை மாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:00 AM IST (Updated: 6 Jun 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவை கவர்னர் கிரண்பெடியை மாற்றக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடியை மாற்றக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

புதுவை சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி குறித்து கவர்னரின் சமூக வலைதள விமர்சனங்கள் தொடர்பான பிரச்சினையை எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் எழுப்பினார்கள். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

கவர்னர் எதற்கு?

சிவா (தி.மு.க.) கவர்னர் வாட்ஸ் அப் மூலம் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். இந்த அரசைப்பற்றியும், நம்மைப்பற்றியும் வெளியே மக்களிடம் தவறான கண்ணோட்டத்தை உருவாக்கி வருகிறார். ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்று கூறும் திராவிட இயக்கத்தின் மூலம் வந்தவர்கள் நாங்கள். அவர் மக்கள் பிரதிநிதிகளை மதிக்கவில்லை. அவர் தண்டிக்கப்பட வேண்டும். தற்போது ஒரு அதிகாரியை கவர்னர் திட்டுவது தற்போது வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.

கட்டவிழ்ப்போம்

அனந்தராமன் (காங்) தற்போது கவர்னர் முதல்–அமைச்சருக்கு கேள்விகளை விடுத்துள்ளார். நான் ரப்பர் ஸ்டாம்பா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஒரு கவர்னருக்கும், முதல்–அமைச்சருக்கும் இடையே இடைவெளி என்றால் கடிதமோ, அழைத்து பேசுவதோதான் தீர்வாக இருக்கு முடியும். ஆனால் கவர்னர் பொறுப்பற்ற முறையில் சமூக வலைதளங்களில் தான்தோன்றித்தனமாக கருத்துகளை பதிவு செய்கிறார். எனவே இந்த அவையில் இதற்கு முடிவு எடுக்கவேண்டும். எங்களை விமர்சித்தால் கவர்னருக்கு எதிராக மக்கள் போராட்டத்தை கட்டவிழ்த்துவிடுவோம். மக்களிடம் இந்த அரசுக்கு எதிராக வேறுவிதமான எண்ணங்களை திணிக்கிறார். இங்கு இருப்பவர்களுக்கு மக்கள் வளர்ச்சியில் அக்கறை இல்லாததுபோல் சித்தரிக்கிறார்.

மாற்ற வேண்டும்

அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர்போல் செயல்பட்டு வருகிறார். 22 மத்திய மந்திரிகளை சந்தித்தேன் என்றார். எவ்வளவு நிதி வாங்கி வந்தார்? தற்போது முதல்–அமைச்சர், அமைச்சர்கள் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். சென்டாக் மாணவர்களுக்கு நிதி தரும் கோப்பில் அவர் கையெழுத்திடவில்லை. நாங்கள் எந்த நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினோம். அவரை மாற்றவேண்டும் என்று ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரியிடம் வலியுறுத்த வேண்டும். போராட்டம் தொடங்கினால் இந்த அரசுக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்.

அன்பழகன் (அ.தி.மு.க.) அவர் தினந்தோறும் நம்மை விமர்சித்து வருகிறார். பலமுறை எடுத்துக்கூறியும் அவர் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. எனவே அவரை மாற்றாவிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் தீர்மானத்தை இந்த அவையில் நிறைவேற்றவேண்டும்.

அமைச்சர் கமலக்கண்ணன் இதுதொடர்பாக இந்த அவையை ஒத்திவைத்து ஒரு முடிவு எடுக்கவேண்டும்.

சிவா இதற்கு முடிவு கண்டுவிட்டு இந்த அவையை நடத்துங்கள்.

என்ன தடை?

ஜெயமூர்த்தி (காங்) தீர்மானம் கொண்டுவர என்ன தடை உள்ளது?

லட்சுமிநாராயணன் (காங்) கவர்னர் மாபெரும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவரை கண்டிக்கவேண்டும்.

தீப்பாய்ந்தான் (காங்) ஆதிதிராவிட மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்கும் கோப்பில் அவர் கையெழுத்திடவில்லை. எங்கள் சமுதாயத்துக்கு எதிராக அவர் செயல்படுகிறார்.

இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் பேசினார்.


Next Story