பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொலை: 2 கொள்ளையர்களுக்கு தூக்கு தண்டனை நாமக்கல் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொலை: 2 கொள்ளையர்களுக்கு தூக்கு தண்டனை நாமக்கல் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Jun 2017 10:30 AM IST (Updated: 6 Jun 2017 10:30 AM IST)
t-max-icont-min-icon

பெண் டாக்டர் உள்பட 3 பேரை கொலை செய்து, நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் கொள்ளையர்கள் 2 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நாமக்கல் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள தோப்பூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி சிந்து (வயது32). இருவரும் டாக்டர்கள். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர்.

கணவன் - மனைவி இருவரும் பணிக்கு சென்று விடுவதால், குழந்தையை பராமரிக்க சிரமம் இருந்து வந்தது. எனவே பெண் டாக்டர் சிந்து, தனது குழந்தையை நாமக்கல்லில் உள்ள பள்ளியில் சேர்க்க கடந்த 2011-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நாமக்கல் முல்லை நகரில் உள்ள தனது சித்தி உமாதேவி வீட்டிற்கு வந்தார். அக்டோபர் மாதம் 13-ந் தேதி சிந்துவின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டாள். உமாதேவி, நாமக்கல்லில் உள்ள தனது கணவர் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார்.

சிந்து, அவரது தாயார் சத்தியவதி (50), பாட்டி விசாலாட்சி (68) ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது பட்டப்பகலில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்து, 3 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்து, வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.

3 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த சந்தானம் (28), வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த காமராஜ் (33), நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த இளங்கோ (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பகுதியில் ஒரு சிறுமி மற்றும் 2 பெண்களை கழுத்தை அறுத்து கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே அந்த வழக்கிலும் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் கரூர் மாவட்ட கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு 3 பேருக்கும் 5 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முக்கிய குற்றவாளி சாவு

கடந்த 2014-ம் ஆண்டு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தானம் சிறையில் இருக்கும்போதே இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து காமராஜ், இளங்கோ ஆகிய 2 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையே நாமக்கல் கோர்ட்டில் பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 59 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கின் விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வரன் உள்பட 10 போலீஸ் அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந் தேதி காமராஜ், இளங்கோ ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டது. இவர்களுக்கான தண்டனையை நேற்று நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார்.

அப்போது அவர், பெண் டாக்டர் உள்பட 3 பெண்களை கொலை செய்த குற்றத்திற்கு இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். இதுதவிர கூட்டுசதி செய்தல், அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளுக்கு ஆயுள்தண்டனையும் மற்றும் சொத்தை அபகரித்தல் பிரிவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

பாடமாக அமையும்

இந்த தீர்ப்பு குறித்து டாக்டர் சிந்துவின் சித்தி உமாதேவி கூறியதாவது:-
எனக்கு குழந்தை இல்லை, இதனால் சிந்துவை என்னுடைய வளர்ப்பு மகளாக கருதி வளர்த்து படிக்க வைத்தேன். சிந்துவின் தாய் எங்களுடனேயே இருந்தார்.
ஒரே நாளில் எங்களது குடும்ப உறவுகள் 3 பேரை இழந்து கடந்த 6 ஆண்டுகளாக நடை பிணமாய் வாழ்ந்து வருகிறேன். குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள தூக்கு தண்டனை எனக்கு ஆறுதலை அளிக்கிறது. இந்த தீர்ப்பு இதுபோன்ற கொடும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு பாடமாக இருக்கும். இதுபோன்ற தீர்ப்பால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

முதல் முறையாக தூக்கு தண்டனை

இதுகுறித்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான, ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வரன் கூறியதாவது:-

இந்த வழக்கில் போலீசாரின் கூட்டு முயற்சியால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் நீதிமன்ற வரலாற்றில், முதல் முறையாக இப்போது தான் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 கொள்ளையர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


Next Story