பாம்பனில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உண்ணாவிரதம், கடையடைப்பு
பாம்பனில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உண்ணாவிரதம் கடையடைப்பு கடைகளும் அடைக்கப்பட்டன
ராமேசுவரம்,
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாம்பனில் உண்ணாவிரம் இருந்தனர். கடைகளும் அடைக்கப்பட்டன.
டாஸ்மாக் கடைராமேசுவரம் தாலுகாவில் ராமேசுவரத்தில் 6 கடைகளும், தங்கச்சிமடத்தில் 3 கடைகளும், பாம்பனில் 3 கடைகளும் என மொத்தம் 12 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. நெடுஞ்சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ராமேசுவரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன. பாம்பனில் உள்ள 3 கடைகள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையல் ராமேசுவரம் தீவை முற்றிலும் மதுக்கடை இல்லாத தீவாக உருவாக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர். கடந்த மாதம் பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மகளிர் சங்கத்தினர் 500–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், விரைவில் இந்த கடைகளை அகற்றுவதாக உறுதி அளித்திருந்தனர்.
உண்ணாவிரதம்இதனிடையே கடந்த மாதம் (மே) 1–ந்தேதி பாம்பனில் தனி அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான உம்முல் ஜாமியா தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பாம்பனில் செயல்பட்டு வரும் 3 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து இந்த கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதனை கண்டித்தும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தியும் நேற்று பாம்பனில் முனீசுவரன், ராயப்பன் ஆகியோரது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்££ள் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக், மீனவர் சங்க தலைவர் போஸ், எஸ்.பி.ராயப்பன், சமூக ஆர்வலர் தில்லைபாக்கியம், மீனவ மகளிரணி தலைவிகள் இருதயமேரி, மோட்சராகிணி, பாரதீய மஸ்தூர் யூனியன் சங்க தலைவர் பாரதிராஜன், ஜமாத் தலைவர் ஜமால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து பாம்பனில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.