வைகாசி விசாக பெருந்திருவிழா: கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் தேரோட்டம்


வைகாசி விசாக பெருந்திருவிழா: கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:15 AM IST (Updated: 6 Jun 2017 11:17 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 10 நாள் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த மாதம் 29– ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசே‌ஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மேலும் சிறப்பு அன்னதானம், வாகன பவனி, சப்பரபவனி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் நடந்தது.

கன்னியாகுமரி,


9–ம் திருவிழாவான நேற்று காலை பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து பல்லக்கில் அம்மனை எழுந்தருளச்செய்து சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நெற்றிப்பட்டம் சூட்டப்பட்ட அலங்கரிப்பட்ட யானை முன்செல்ல பல்லக்கில் அம்மன், தெற்கு ரதவீதி, பிள்ளையார் கோவில் தெரு வழியாக தேர் நின்ற கீழரத வீதியை வந்தடைந்தது. காலை 8 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார்.

 சுற்றுலா பயணிகள்


குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பாரதி தேர் சக்கரத்தில் தேங்காய் உடைத்து வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பட்டு துணி தோரணம், பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் காலை 8.30 மணிக்கு ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்து வரப்பட்டது. இதில் திரளான சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தில் மலேசியா மக்கள் சக்தி கட்சி தேசிய தலைவர் தனேந்திரன், தொழில் அதிபர்கள் மணி,கோபி, கோபால கிருஷ்ணன், அரிஹரன், நோக்கியா பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.பாலன், சோனா கண்ணன், மாதவபுரம் விநாயகமூர்த்தி, சிவலிங்கம், செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழு அறக்கட்டளை தலைவர் நாகேஸ்வரி சந்திரன், காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பிதங்கம், பகவதி ம்மன் கோவில் பிரசாத ஸ்டால் குத்தகைதாரர் ராமச்சந்திரன், அகஸ்தீஸ்ரம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் அரிகிருஷ்ணபெருமாள், சுசீந்திரம் திருவாடுதுறை ஆதீன கிளை மட ஆய்வாளர் ஆறுமுகம், கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் கோடி தீப வழிபாடு குத்தகைதாரர் கணேசன். பகவதி அம்மன் திருக்கோவில் வளாக சிறு வியாபாரிகள் நலசங்க தலைவர் தங்கத்துரை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மலர் தூவி வரவேற்பு


அம்மன் தேர் கீழரதவீதியில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதி, வழியாக மதியம் தேர் நிலைக்கு வந்தது. தேர் வந்த வழி எங்கும் பல வண்ண மலர்களை பக்தர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு குடிநீர், மோர், பானகாரம், பழங்கள் வழங்கப்பட்டது. தேர் நிலைக்கு சென்றடைந்ததும் பக்தர்களுக்கு கன்னியம்பல மண்டபத்தில் வைத்து கஞ்சி தர்மம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை சமயஉரை, இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடந்தது.

படகு போக்குரத்து


கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகளும், விவேகானந்தர் மண்டப ஊழியர்களும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களும் தேரோட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக விவேகானந்தர் மண்டபத்துக்கு நேற்று காலை 8 மணி முதல் 10 மணிவரை 2 மணி நேரம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி.வேணுகோபால், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் கிரேஸியஸ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீசாரும், ஊர்காவல் படையினரும் போக்குவரத்தை சீரமைத்தனர்.

தெப்பத்திருவிழா


10–ம் திருவிழாவான இன்று(புதன்கிழமை)காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்நது வருடத்தில் 5 நாட்கள் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசம் செய்கிறார், சிறப்பு அபிஷேகம்,மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு தெப்பக்குளக்கரையில் அம்மன் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெறுகிறது.


Next Story