ஜாமீன் கேட்டு அட்டாக்பாண்டி மனு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்க்கப்பட்டனர்.
மதுரை,
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த அவரை 2 ஆண்டுகளுக்கு பின்பு மும்பையில் போலீசார் கைது செய்து நெல்லை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் ஜெயிலில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 21 மாதங்களாக பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளேன். மஞ்சள்காமாலை நோய் மற்றும் கணைய பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் எனக்கு ஜாமீன் வழங்கினால், தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற வசதியாக இருக்கும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் மீதான பொட்டுசுரேஷ் கொலை வழக்கு, துரை தயாநிதியின் நண்பர் ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகியவற்றை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த வழக்குகளின் மீதான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தநிலையில் மனுதாரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் தரமான சிகிச்சை பெற வசதியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்“ என்றார்.
இதனையடுத்து மனுதாரர் தொடர்பான வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும் விசாரணை தாமதம் ஆவது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
விசாரணை முடிவில், இந்த மனு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 9–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.