ஜி.எஸ்.டி.வரி விதிப்பை குறைத்து தொழில் துறையை பாதுகாக்க வேண்டும்


ஜி.எஸ்.டி.வரி விதிப்பை குறைத்து தொழில் துறையை பாதுகாக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:00 AM IST (Updated: 7 Jun 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.வரி விதிப்பை குறைத்து தொழில் துறையை பாதுகாக்க வேண்டும் கோவை தொழில்துறையினர் கோரிக்கை

கோவை,

ஜி.எஸ்.டி.வரி விதிப்பை குறைத்து கோவை தொழில் துறையை பாதுகாக்க வேண்டும் என்று தொழில்துறையினர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு

கோவையை சேர்ந்த தொழில் அமைப்புகள் சார்பில் எஸ்.ரவிக்குமார் (காட்மா), ஜே.ஜேம்ஸ் (டேக்ட்), கே.மணிராஜ் (கோப்மா), ஏ.சிவசங்கர் (பவுண்டரி உரிமையாளர் சங்கம்), எம்.ராதாகிருஷ்ணன் (வெட்கிரைண்டர்சங்கம்) கே.கே.ரவி (சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம்), எல்.ராஜன், சாகுல் அமீது, (கிரில் தயாரிப்பாளர் சங்கம்) உள்பட பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தமிழக நிதிஅமைச்சர் டி.ஜெயக்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கிரைண்டர், மோட்டார் பம்பு செட் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும்.

பாதிப்பு

தற்போது ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் பம்பு செட்டுகளுக்கு 12 சதவீதம், அதன் மூலப்பொருட்களுக்கு 18 சதவீதம் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சிறு, குறுந்தொழில்களை பாதிக்கும். ஆகவே விவசாய பம்பு செட்டுகளுக்கு 5 சதவீதம், மற்ற பம்பு செட்டுகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்க வேண்டும். இதே போல கிரைண்டர்களுக்கு 28 சதவீதம் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைவார்கள்.ஆகவே கிரைண்டர்களுக்கு 12 சதவீத வரியை மட்டுமே விதிக்க வேண்டும்.

அபராதம் கூடாது

குறுந்தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை பெரிய நிறுவனங்களில் இருந்து ஜாப்–ஆர்டர் (வர்த்தகஒப்பந்தம்) மூலம்தான் தொழில் நடந்து வருகிறது. ஆகவே குறுந்தொழில்களுக்கான உச்ச வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். கம்ப்ரஸர் மோட்டார்களுக்கு 28 சதவீதத்துக்கு பதிலாக 12 அல்லது 18 சதவீதம் வரி விதிக்க வேண்டும். மேலும் ஜி.எஸ்.டி.வரி குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளும்வரை, சிறு, குறு வணிகர்களிடம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது. ஏற்கனவே தொழில்துறை கடும் நெருக்கடியில் உள்ளது. ஆகவே ஜி.எஸ்.டி.வரி விதிப்பை குறைத்து தொழில்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

முன்னதாக தொழில் அமைப்பினர், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, கோவை வந்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணை மந்திரி ஹரிபாய் சவுத்திரியிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story