சட்டமன்றம் கூடும் வரையில் அ.தி.மு.க. ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது
சட்டமன்றம் கூடும் வரையில் அ.தி.மு.க. ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது மு.க.ஸ்டாலின் பேட்டி
ஈரோடு,
சட்டமன்றம் கூடும் வரையில் அ.தி.மு.க. ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தூர்வாரும் பணிதி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடு மாவட்டம், செம்மாம்பாளையம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குளம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வேதனைகடந்த 6 ஆண்டு காலமாக நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் குளங்கள் தூர்வாரப்படவில்லை என்பது வேதனையளிப்பதாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் இருக்கக்கூடிய குளங்கள் எல்லாம் தூர்வாரப்பட்டன என்பது நாடறிந்த உண்மை. ஆனால், பருவமழை பொய்த்து, விவசாயிகள் எல்லாம் பல கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கும் இந்த நேரத்தில்கூட அ.தி.மு.க. ஆட்சி அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் இருப்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
தி.மு.க. இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆங்காங்குள்ள தி.மு.க. நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் எல்லாம் குளங்களை தூர்வாருகின்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை நான் விடுத்திருந்தேன். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, தமிழகத்தின் பல இடங்களில் தி.மு.க.வின் முன்னோடிகள் குளங்களை தூர்வாருகின்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க.வின் இந்தப் பணிகளை பார்த்த பிறகாவது இந்த ஆட்சி விழிப்படைந்து இருக்கும் என்று நாங்கள் கருதினோம். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே மேட்டூர் அணையை தூர்வாரப்போகிறோம் என்று சொல்லி, விளம்பரத்துக்காக மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு, அடையாளத்துக்காக அந்தப் பணியை தொடங்கிவைத்து, பிறகு அந்தப் பணியை கிடப்பில் போடப்பட்டு விட்டார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–
ஆட்சி நிலைக்குமா?கேள்வி:– முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படம் அரசு அலுவலகங்களில் திடீரென வைக்கப்பட்டு இருக்கின்றதே?.
பதில்:– குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ள ஜெயலலிதாவின் படங்கள் ஏற்கனவே இருக்கின்றபோது, இப்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் இருப்பதில் எந்த வித தவறுமில்லை என்று தான் நான் கருதுகிறேன்.
கேள்வி:– கடந்தமுறை சட்டமன்றம் கூட்டப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், 14–ந் தேதி எப்படி இருக்கும்?. தி.மு.க.வின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
பதில்:– சட்டமன்றம் கூடும் வரையில் இந்த ஆட்சி நிலைக்குமா என்பதே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, ஆட்சி நிலைத்து அதன் பிறகு சட்டமன்றம் கூடும்போது, தி.மு.க. தனது ஜனநாயக கடமையை நிச்சயம் ஆற்றும்.
இன்னும் எத்தனை அணிகள்?கேள்வி:– அமைச்சர் ஜெயகுமாருக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்தது யார் என்று டி.டி.வி.தினகரன் கேட்டு இருக்கிறாரே?.
பதில்:– அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் ஓரணியாக இருந்தது. அவர் மறைந்த பிறகு 2 அணிகளாக மாறி, இப்போது 3 அணிகளாக பிரிந்திருக்கிறது. போகின்ற போக்கைப் பார்த்தால் இன்னும் எத்தனை அணிகள் உருவாகப் போகின்றன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக ஈரோடு செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–
மானியக் கோரிக்கை விவாதம்கேள்வி:– சட்டப்பேரவை கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறதே?.
பதில்:– எப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவில்லையோ, அப்போதே சட்டப்பேரவையை கூட்டியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சி அதனை செய்ய முன்வரவில்லை. எனவே, எதிர்க்கட்சி என்ற முறையில் தொடர்ந்து சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வந்தோம். சபாநாயகரை நேரில் சந்தித்தும் அதனை வலியுறுத்தினோம். இப்போதாவது சட்டப்பேரவையை கூட்டுவது உள்ளபடியே வரவேற்கத்தக்கது.
இதன்மூலம், ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ள பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக இந்தத் தொடர் அமைந்திருக்கிறது. ஆனால், இப்போது அ.தி.மு.க.வில் இருக்கின்ற சூழ்நிலைகளைப் பார்க்கின்றபோது, அவையெல்லாம் நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கின்றது.
பொதுமக்கள் காத்திருப்புகேள்வி:– தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று கூறப்படுகிறதே?.
பதில்:– தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதன் மூலமாக ஒரு நல்லாட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதை எதிர்பார்த்து தான் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் ஆட்சி மாற்றம்கேள்வி:– ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என எதிர்பார்க்கின்றீர்களா?.
பதில்:– எவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.