பெங்களூரு நாகசந்திரா–எலச்சனஹள்ளி பாதையில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு சோதனை முடிந்தது


பெங்களூரு நாகசந்திரா–எலச்சனஹள்ளி பாதையில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு சோதனை முடிந்தது
x
தினத்தந்தி 7 Jun 2017 2:00 AM IST (Updated: 7 Jun 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு நாகசந்திரா–எலச்சனஹள்ளி பாதையில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு சோதனை முடிவடைந்துவிட்டதாக சட்டசபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு நாகசந்திரா–எலச்சனஹள்ளி பாதையில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு சோதனை முடிவடைந்துவிட்டதாக சட்டசபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

கர்நாடக சட்டசபையில் நேற்று ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பதில் அளிக்கையில் கூறியதாவது:–

மெட்ரோ ரெயில்...

பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வழித்தடத்தையும் இறுதி செய்துள்ளோம். விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். எம்.ஜி.ரோட்டில் இருந்து நாகவரா வரைக்கும் சுரங்க பாதையும், அங்கிருந்து ஜக்கூர், ஜாலா மூலமாக தேவனஹள்ளி விமான நிலையம் வரை உயர்த்தப்பட்ட மெட்ரோ ரெயில் பாதையும் அமைக்கப்படுகிறது.

நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையிலான பாதையில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. அந்த பாதையில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு சோதனை முடிவடைந்தது. ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனரிடம் இருந்து சான்றிதழ் வர வேண்டியுள்ளது. அந்த சான்றிதழ் வந்த உடனேயே நாகசந்திரா–எலச்சனஹள்ளி பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் தேதி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

நெலமங்களா வரை விரிவாக்கம்

உறுப்பினர் ரபீக்அகமது எழுந்து, பீனியா வரை உள்ள மெட்ரோ ரெயில் சேவை துமகூரு வரை விஸ்தரிக்கப்படுமா? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த கே.ஜே.ஜார்ஜ், “துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கு வரை மெட்ரோ ரெயில் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இந்த சேவை நெலமங்களா வரை விரிவாக்கம் செய்யப்படும். அங்கிருந்து துமகூருவுக்கு புறநகர் ரெயில் சேவை தொடங்கப்படும். பெங்களூருவில் தற்போது ஓடும் மெட்ரோ ரெயிலில் 3 பெட்டிகள் இருக்கின்றன.

இதன் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு என்று தனியாக பெட்டியை ஒதுக்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மேலும் புதிதாக 150 மெட்ரோ ரெயில் பெட்டிகளை தயாரித்து வழங்குமாறு பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கியுள்ளோம். அந்த பெட்டிகள் விரைவில் கிடைக்கும்“ என்றார்.


Next Story