முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:15 AM IST (Updated: 7 Jun 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சோமரசம்பேட்டை,

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி நந்தி வாகனத்திலும், சிங்காரவேலர் அன்னம், வெள்ளிமயில், ரிஷபம், யானை, சேஷம் போன்ற வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

நேற்று முன்தினம் கோவிலில் இருந்து சிங்காரவேலர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சென்று அதவத்தூரில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.

தேரோட்டம்

நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிசாமியின் ரதாரோகணம் நடைபெற்றது. விசாகத்தின் முக்கிய நிகழ்வான விசாக தேரோட்டம் வடம் பிடிப்பதற்கு முன் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருதேரில் அமர வைக்கப்பட்டார். பின்னர் தேரோட்டம் தொடங்கியது. இதில் அதவத்தூர், வரகனேரி, அல்லித்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு, நவலூர் குட்டப்பட்டு ஆகிய ஊர்களின் முக்கியஸ்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பட்டு செல்லும் வைபவமும் நடந்தது.

இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு நடராஜர் தரிசனம், 11.30 மணிக்குள் விசாக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், பிறகு பால் காவடிகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தெப்ப உற்சவம்

நாளை(வியாழக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. 9-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடை பெறும்.


Related Tags :
Next Story