பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு: ஓ.ராஜா உள்பட 6 பேர் கோர்ட்டில் ஆஜர்
பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு: ஓ.ராஜா உள்பட 6 பேர் கோர்ட்டில் ஆஜர் 20–ந்தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
திண்டுக்கல்,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). கோவில் பூசாரி. இவர், கடந்த 2012–ம் ஆண்டு தற்கொலை செய்தார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக பெரியகுளம் முன்னாள் நகரசபை தலைவர் ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பாண்டி இறந்துவிட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை திண்டுக்கல் செசன்சு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக செயல்பட்டு பிறகு விலகிய வக்கீல் பவானி மோகன், மீண்டும் அரசு தரப்பில் வாதாட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஓ.ராஜா தரப்பில் வக்கீல் கண்ணப்பன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது, 2 மனுக்கள் மீதான விவாதம் நடந்தது. இதையொட்டி வக்கீல் கண்ணப்பன் ஆஜராகி வாதிட்டார். வக்கீல் பவானி மோகன் சார்பில் அவருடைய ஜூனியர் வக்கீல் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வருகிற 20–ந்தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் உத்தரவு பிறப்பித்தார்.