சென்னையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கக்கோரி பிரசாரம்


சென்னையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கக்கோரி பிரசாரம்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:00 AM IST (Updated: 7 Jun 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று, குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ‘நோட்டீஸ்’ வழங்கினர்.

சென்னை, 

சென்னையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், அரசு பள்ளிகளின் தரத்தை மக்களிடம் எடுத்து சொல்லும் விதத்திலும் மாவட்ட நிர்வாகம் நகர் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. இதில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவையும் பங்கேற்று உள்ளன. 

சென்னை நகர் முழுவதும் நடக்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள், சலுகைகளை எடுத்துக்கூறி வீதிவீதியாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். செல்லும் வழியெங்கும் பார்க்கும் மக்களிடம் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கக்கோரி வலியுறுத்துகின்றனர். 

சென்னையில் நேற்று நடுக்குப்பம் பகுதியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வம் தொடங்கிவைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ், உதவி அதிகாரி ஆறுமுகம் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமையில் அன்னிபெர் கிரேஸ், செந்தமிழ்செல்வி உள்பட பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று, குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ‘நோட்டீஸ்’ வழங்கினர். அரசு பள்ளிகளில் வழங்கப்படும் உதவித்தொகை முதல் மடிக்கணினி வரையிலான சலுகைகளை பெண்களிடம் எடுத்துரைத்தனர். 

Next Story