கல்குவாரி தண்ணீர் 2 நாட்களில் வினியோகம்


கல்குவாரி தண்ணீர் 2 நாட்களில் வினியோகம்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:45 AM IST (Updated: 7 Jun 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

மாங்காடு சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இன்று தரச்சோதனை செய்யப்பட்டு, 2 நாட்களில் குடிநீருக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

சென்னை, 

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, புறநகர் பகுதியான மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தை சுற்றியுள்ள 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தலாம் என்று ஆய்வில் தெரியவந்தது. கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து கல்குவாரியில் இருந்து நேற்று மதியம் முதல் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று (புதன்கிழமை) தரச்சோதனை செய்து, 2 நாட்களில் மத்திய சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீராக வினியோகம் செய்யப்பட உள்ளது.

தென்சென்னை பாதிப்பு

தென்சென்னைக்கு உட்பட்ட அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தென்சென்னை பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் முறையாக வருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–

தரச்சோதனை

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதற்காக 22 கல்குவாரிகளில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீதம் 100 நாட்களுக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 3.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 22 கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தண்ணீரை சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று தரச்சோதனை செய்ய இருக்கிறோம். இந்த சோதனை முடிந்த பின்னர் 2 நாட்களில் குடிநீருக்காக வினியோகம் செய்யப்படும். இதன்மூலம் ஓரளவு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நினைக்கிறோம்.

நிலைமை சமாளிப்பு

தற்போது சென்னையில் கோடை மழை பெய்துள்ளதுபோல் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தால் குடிநீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க முடியும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை பொறுத்தவரையில் பூண்டி, சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்டன. 

செம்பரம்பாக்கம் ஏரியில் 71 கனஅடியும், புழல் ஏரியில் 131 கனஅடியும் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இருந்தாலும் விவசாய கிணறுகள், நெய்வேலி சுரங்கம், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story