எந்த தடைகள் வந்தாலும் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
எந்த தடைகள் வந்தாலும் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு
புதுச்சேரி,
எந்த தடைகள் வந்தாலும் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
ஓராண்டு நிறைவு விழாபுதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவு விழா நேற்று மாலை ஆனந்தா இன் ஓட்டலில் உள்ள கருத்தரங்க அறையில் நடந்தது. விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர், அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ஓராண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
வரி விதிக்க முடியாதுகாங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி அரசு 6–6–2016 அன்று பொறுப்பேற்றது. கடந்த கால ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் உள்ள நிதியை மற்ற துறைகளுக்கு மாற்றி முறையாக செலவு செய்யப்படாமல் இருந்தது. அரசின் பல்வேறு துறைகளில் கொலைப்புறமாக அதிக ஆட்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மத்திய அரசு புதுவைக்கு கொடுக்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை. தற்போது 27 சதவீதம் மட்டுமே மானியம் வழங்கி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு 42 சதவீதம் வரை வழங்கி வருகிறது. புதுவை மாநிலத்திற்கு தனிக்கணக்கு தொடங்குவதற்கு முன்பு 70 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் 30 சதவீதமாக மாற்றப்பட்டது. தற்போது 27 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு கொடுப்பது ரூ.576 கோடி தான். வரி மூலம் வருவாய் ரூ.4 ஆயிரம் கோடி ஆகும். 13 லட்சம் மக்கள் தொகை உள்ள புதுவையில் இதற்கு மேல் வரி விதிக்க முடியாது.
ரவுடிகளுக்கு இடமில்லைஎங்கள் அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து கடந்த என்.ஆர்.காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை, நிதி நிர்வாக குறைபாடுகளை சரி செய்து வருகிறோம். புதுவையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கவனம் செலுத்தி ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் கடந்த 2016–ம் ஆண்டு புதுவைக்கு சுற்றுலா பயணிகள் 10 லட்சம் பேர் வந்துள்ளனர். இதனை 20 லட்சமாக உயர்த்த வேண்டும்.
புதுவையில் ரவுடிகளுக்கு இடமில்லை. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகளுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ரவுடிகள் இங்கிருந்து வெளியேறிவிட்டனர். ரவுடிகளின் சொத்துக்களை பறிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலவச அரிசி வழங்கும் திட்டம்இந்த ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடல், பத்திரபதிவுக்கு தடை, 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக அமல்படுத்துதல் போன்ற காரணங்களால் அரசுக்கு ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. மத்திய அரசு போதுமான நிதியை நமக்கு வழங்கவில்லை. இருப்பினும் நாம் நமது திட்டநிதியை முறையாக திட்டமிட்டு செலவு செய்ததால் 93.4 சதவீதம் நிதியை செலவு செய்ய முடிந்தது. சிறப்பு கூறு நிதி முழுமையாக ஆதிதிராவிட மக்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து செயல்படுத்துவோம்எந்த தடைகள் வந்தாலும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம். இதேபோல் முதியோர் உதவித்தொகை, சென்டாக் கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த குறைந்த காலத்திலேயே புதிய தொழிற்கொள்கையை கொண்டு வந்துள்ளோம். எங்கள் அரசின் எண்ணம் புதுவை மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும், சிறிய மாநிலங்களில் புதுவையை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். புதுவையில் துணை துறைமுகம் கொண்டு வரப்பட உள்ளது. துறைமுக திட்டம் தொடங்கப்பட்டால் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மத்திய அரசிடம் இருந்து புதுவை மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய தொகையை பெற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக பல முறை பிரதமர், ஜனாதிபதி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசியுள்ளோம்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
நமச்சிவாயம்விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:–
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. நிதிநெருக்கடி மற்றும் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் முதல்–அமைச்சர் நாராயணசாமி அதனை சரி செய்து மாநில வளர்ச்சி, பொருளாதார மேம்பாட்டுக்கு தேவையான திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசிடம் இருந்த நிதியை பெற பிரதமர், ஜனாதிபதி, மத்திய மந்திரிகளை முதல்–அமைச்சருடன் நாங்களும் சென்று சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய அரசு செவிசாய்க்க வில்லை.
கடந்த 2007–ம் ஆண்டுக்கு பின்னர் பெற்ற கடனுக்கு இதுவரை வட்டி மட்டுமே கட்டி வந்தோம். இனி வரும் காலங்களில் அசலையும் சேர்த்துக்கட்ட வேண்டும். இது ஒருபுறம் இருக்க கவர்னர் ஒரு பக்கம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். கட்சி நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கலாம். நமது கூட்டணி ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கு தேவையானவை செய்யப்படும்.
இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.