முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது


முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 7 Jun 2017 4:00 AM IST (Updated: 7 Jun 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் திரு-பட்டினத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கடந்த ஜனவரி மாதம் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

காரைக்கால்,

காரைக்கால் திரு-பட்டினத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கடந்த ஜனவரி மாதம் கூலிப்படையினரால் வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சாராய வியாபாரி ராமு என்கிற ராதாகிருஷ்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக வி.எம்.சி. சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ராமுவின் 2-வது மனைவி எழிலரசி, கூலிப்படையை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரபு, சண்முகம், கார்த்திக், இளவரசன், குணசேகரன், தமிழரசன், கண்ணன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளான திருச்சி பொன்மலையை சேர்ந்த பிரவீண், விக்ரமன், சிவா சக்திவேல் ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் காரைக்காலை அடுத்த நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில் பிரவீன் (வயது 29) பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிகிறிஸ்டியன்பால் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பிரவீனை கைது செய்தனர். அவரிடம் இருந்து வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் காரைக்கால் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பிரவீனை சிறையில் அடைத்தனர்.

Next Story