வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61¼ லட்சம் மோசடி கணவன்-மனைவி கைது


வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61¼ லட்சம் மோசடி கணவன்-மனைவி கைது
x
தினத்தந்தி 7 Jun 2017 4:45 AM IST (Updated: 7 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61¼ லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் உமாசங்கர்(வயது30).இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்து உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி உறையூரை சேர்ந்தவர் செந்தில்குமார். (வயது45). ரெயில்வே ஊழியர். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி (38). இவர் தில்லை நகர் 4-வது குறுக்கு தெருவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கனடா நாட்டில் மாதம் ரூ.2¼ லட்சத்தில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ஒவ்வொருவரும் ரூ.9 லட்சம் தரவேண்டும். முதல் கட்டமாக தலா ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதை நம்பி எங்கள் பகுதியை சேர்ந்த 12 பேர் சேர்ந்து மொத்தம் ரூ.61 லட்சத்து 25 ஆயிரம் பணம் கொடுத்தோம். பணம் கொடுத்து 3 ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதைத்தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிக்கொண்டே இருந்தனர். வேலையும் வாங்கி தரவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டோம். எனவே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.

கணவன்-மனைவி கைது

இந்த புகார் குறித்து விசாரிக்க கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில் வெளி நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக அகிலாண்டேஸ்வரி நடத்தி வரும் நிறுவனம் அரசு ஆணை பெறவில்லை என்றும் அவர்கள் பணம் மோசடி செய்ததும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து நிறுவன உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி அவரது கணவர் செந்தில்குமார்ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story