சேர்வராயன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்


சேர்வராயன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:00 AM IST (Updated: 7 Jun 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

ஏற்காடு,

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 4,500 அடி உயரத்தில் சேர்வராயன் கோவில் உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான கோவில் தேரோட்டம் நேற்று காலை வெகு விமர்சையாக நடந்தது.

இதையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சேர்வராயப்பெருமாள், காவிரியம்மாள் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்து தேரோட்டம் நடந்தது. இதில் ஏற்காட்டை சுற்றியுள்ள 72 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொதுமக்கள் வழிபாடு

மேலும், ஏற்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை சாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபாடு நடத்தினர். தேர் வரும் வழியில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சேர்வராயன் கோவில் தேரோட்டத்தையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோவிலுக்கு 30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஏற்காட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா என்பதால் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நடராஜன், மல்லூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story