குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Jun 2017 3:30 AM IST (Updated: 7 Jun 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி சிவன்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

காங்கேயம்,

காங்கேயம் அருகே குடிநீர் வழங்கக்கோரி சிவன்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவன்மலை அடிவாரப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் முறையிட்டனர். ஆனாலும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

இதனால் சிவன்மலை ஊராட்சியில் உள்ள மலையடிவாரத்தில் வசிக்கும் நான்கு வீதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சரவணா நகர், ரோட்டுக்கடை, எருக்கலங்காட்டுப்புதூர் ஆகிய பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சிவன்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, சிவன்மலை அடிவாரப்பகுதியில் இருந்து மின் மோட்டார் இயக்கி ஊராட்சியில் உள்ள மற்ற பகுதிகளுக்கு ஊராட்சி மூலம் குடிநீர் கொண்டு செல்கின்றனர். ஆனால் மலை அடிவாரப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் இங்குள்ள ஒரு சில ஆழ்குழாய் கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்கள் பழுதாகியுள்ளது இதை பழுது நீக்கி இயக்கினால் கூட ஓரளவுக்கு குடிநீர் கிடைக்கும் அதையும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

சாலை மறியல் போராட்டம்

இதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வராத காரணத்தால், ஊராட்சி செயலாளர் காஞ்சனாவிடம் இது தொடர்பாக அவர்கள் மனு கொடுத்தனர். அதில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.


Next Story