ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற போளூர் இளம்பெண்
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற போளூரை சேர்ந்த இளம்பெண் விஜயலட்சுமியின் வீட்டிற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே சென்று பாராட்டினார்.
போளூர்,
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற போளூரை சேர்ந்த இளம்பெண் விஜயலட்சுமியின் வீட்டிற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே சென்று பாராட்டினார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபோளூரில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இவருடைய மனைவி காவேரி, அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர். இவர்களுடைய மகள் விஜயலட்சுமி (வயது 26). இவர், 2016–17–ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் (ஐ.ஏ.எஸ்) வெற்றி பெற்றார்.
791–வது ரேங்க் எடுத்த விஜயலட்சுமி இந்திய வருவாய் பணிக்கு தகுதி பெற்றுள்ளார். விஜயலட்சுமி திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் நபர் ஆவார்.
கலெக்டர் பாராட்டுஇந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்று, அவருக்கு பூங்கொத்து, நினைவு பரிசு, திருக்குறள் புத்தகம் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, விஜயலட்சுமி மற்றும் அவரது பெற்றோரிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது விஜயலட்சுமி, கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம், தான் 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்ததையும், சிறுவயது கனவான ஐ.ஏ.எஸ்., பெற்றோர் கொடுத்த ஊக்குவிப்பால் சென்னை மனிதநேயம் அறக்கட்டளையில் பயின்று தேர்ச்சி பெற்றதை குறித்தும் கூறினார்.
அரசுப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த...அதைக்கேட்டு கலெக்டர், விஜயலட்சுமியை பாராட்டி கூறுகையில், அரசுப்பள்ளியில் படித்த நீங்கள் (விஜயலட்சுமி) அரசு பள்ளிகளுக்கு சென்று அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். தேர்வானது குறித்து மாணவ–மாணவிகளிடம் பேச வேண்டும். இது மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியாகவும் மற்றும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் என்றார்.
அதற்கு விஜயலட்சுமி அரசு பள்ளி மாணவர்களிடம் பேச தயாராக உள்ளேன் என்றார். அதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, செய்தி–மக்கள் தொடர்பு அதிகாரி முத்தமிழ்செல்வனிடம், விஜயலட்சுமி அரசு பள்ளிகளில் சென்று மாணவர்களிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.
கலெக்டருடன் தாசில்தார் புவனேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.