மழை தூவுவான் கருவி மூலம் பருத்தி சாகுபடி பணி கலெக்டர் ஆய்வு


மழை தூவுவான் கருவி மூலம் பருத்தி சாகுபடி பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jun 2017 10:45 PM GMT (Updated: 7 Jun 2017 7:05 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் குறைவான தண்ணீரை பயன்படுத்தி மழை தூவுவான் கருவி மூலம் நடைபெற்று வரும் பருத்தி சாகுபடி பணிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் குறைவான தண்ணீரை பயன்படுத்தி பருத்தி சாகுபடி பணிகள் மற்றும் பல்வேறு விவசாய பணிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். முன்னதாக கொரடாச்சேரி எருகாட்டூரில் மழை தூவுவான் கருவி மூலம் 2 ஏக்கர் பரப்பில் நடைபெற்று வரும் பருத்தி சாகுபடி பணிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது மகசூல் விவரங்களை வேளாண்மை அதிகாரியிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்து விளை நிலங்களை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வறட்சியான நிலை இருந்து வருகிறது. இதற்காக குறைவான தண்ணீர்் பயன்படுத்தி மழை தூவுவான் கருவி மூலம் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது. இதற்காக ரூ.3 கோடியே 14 லட்சம் மதிப்பில் 966 மழை தூவுவான் கருவி சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மழை தூவுவான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 7,364 எக்டேரில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது. இயல்பான பரப்பை விட 5 மடங்கு அதிகமாகும்.

காப்பீடு

விலையில்லாமல் வண்டல் மண் எடுத்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் குளம், ஏரிகளில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு விலையில்லா வண்டல் மண் கொண்டு விளைநிலங்களை மேம்படுத்திட வேண்டும். வேளாண்மை காப்பீட்டு திட்டத்தின் மூலம் நெல், பயிறு, உளுந்து மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். அதன்படி குறுவை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.26 ஆயிரத்து 800 மதிப்பிற்கு காப்பீடு செய்ய ரூ.536 செலுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story