ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீச்சு? உடலை தேடும் பணி தீவிரம்


ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீச்சு? உடலை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Jun 2017 1:00 AM IST (Updated: 8 Jun 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு பெண் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பதை அறிவதற்காக கிணற்றில் அவரது உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பெண்ணை கொன்று கிணற்றில் வீச்சு?


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மணலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நீண்ட நாட்களாக துப்பு துலங்காத இந்த வழக்கில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர், மணலூரில் நடந்த கொலைக்கும் தனக்கும் தொடர்பு கிடையாது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பெண்ணை கொலை செய்து, கால்வாய் கிராமத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள வல்லகுளம் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி வீசியதாக தெரிவித்தார்.

உடலை தேடும் பணி தீவிரம்

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் நேற்று அந்த வாலிபரை வல்லகுளம் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு பெண்ணை கொலை செய்து வீசியதாக கூறிய கிணற்றை அந்த வாலிபர் அடையாளம் காட்டினார். அந்த கிணற்றில் சுமார் 25 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. எனவே மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து இரவு வரையிலும் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கிணற்றில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றி பெண்ணின் உடலை மீட்ட பின்னரே அந்த வாலிபர் கூறியது உண்மையா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story