பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்


பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 Jun 2017 4:00 AM IST (Updated: 8 Jun 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் மலர்விழி தகவல்

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

பசுந்தீவன உற்பத்தி

கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கால்நடைகள் உற்பத்திக்கு பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியை பெருக்குவதற்கு அதிக அளவு பசுந்தீவனம் வழங்க வேண்டும். இதேபோல் பால் கொழுப்பை அதிகரிக்க அடர் தீவனம் வழங்கப்பட வேண்டும். கால்நடைகளுக்கு மொத்த உற்பத்தி செலவீனத்தில் 65–ல் இருந்து 70 சதவீதம் பசுந்தீவன உற்பத்திக்கும், அடர் தீவனம் வழங்குவதற்கும் மட்டுமே செலவிடப்படுகிறது. எனவே தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அடர் தீவனம்

விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை பராமரிப்பு துறை மூலம் நடப்பு நிதியாண்டான 2017–18–ல் அரசு மானியத்துடன் கூடிய தீவன பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி அரசு நீர்ப்பாசன பகுதியில் கம்பு நேப்பியர் கோ–4 மற்றும் கோ–5 புல் கரணைகள் சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர கால்நடை வளர்ப்போர் சொந்தமாக பசுந்தீவனம் வளர்த்து, அதிலிருந்து விதை உற்பத்தி செய்து பயன்பெறும் பொருட்டு சோளம் விதைகள் 5 ஏக்கருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் தரமான பால் உற்பத்திக்கு அடர் தீவனம் இன்றியமையாததாகும். எனவே அடர் தீவன செலவை குறைக்கும் வகையில் 200 விவசாயிகளுக்கு “அசோலா“ வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறது.

வறட்சி காலங்களில் கால்நடைகளின் பசுந்தீவன தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு நிலமற்ற விவசாயிகளும் பயன்பெறும் வகையில் 10 விவசாயிகளுக்கு “மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறை“ செயல்படுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டத்தில் தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள், சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு முன்னர் இந்த திட்டத்தில் பயனடைந்தவராக இருக்கக்கூடாது. மேற்கண்ட திட்டங்களின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் எல்லா இனங்களிலும் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story