நரிக்குடி அருகே சாலையை சீரமைக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்


நரிக்குடி அருகே சாலையை சீரமைக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Jun 2017 3:45 AM IST (Updated: 8 Jun 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி அருகே சாலையை சீரமைக்க கோரி மாணவர்கள் மறியல், பள்ளி திறந்த முதல் நாளே போராட்டம்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே சாலையை சீரமைக்க கோரி பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளே மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

பழுதடைந்த சாலை

திருச்சுழி- கமுதி சாலையில் இருந்து நரிக்குடி அருகிலுள்ள நத்தகுளம் கிராமத்துக்கு பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலான தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. செப்பனிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால் அந்தப்பகுதியாக செல்லும் அனைவரும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நத்தகுளம் கிராமத்தினர் அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மறியல்

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடம் திறந்த நிலையில் முதல் நாளே அந்த ஊரைச்சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் சாலையை உடனடியாக சீரமைத்திட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகளை அழைத்து வந்து அந்த கிராமத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.

தகவல் அறிந்து திருச்சுழி தாசில்தார் சின்னத்துரை, நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிகுமார் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாலும் அதை ஏற்க மறுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து லாரிகளில் மண் கொண்டு வந்து சாலை குழிகளில் கொட்டி தற்காலிகமாக செப்பனிடப்பட்டது. இதை தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த மறியலால் காலை 8 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story