விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான அரசாணை வெளியிட வேண்டும்


விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான அரசாணை வெளியிட வேண்டும்
x
தினத்தந்தி 8 Jun 2017 3:30 AM IST (Updated: 8 Jun 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான அரசாணை வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை

 

விருதுநகர்,

விருதுநகரில் அரசு அறிவித்துள்ள பல் மருத்துவகல்லூரியை தொடங்குவதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவகல்லூரி

கடந்த 2011–ம் ஆண்டு விருதுநகரில் மருத்துவகல்லூரி தொடங்கப்படும் என அறிவித்த அப்போதைய தி.மு.க. அரசு அதற்காக ரூ.100 நிதி ஒதுக்கீடும் செய்தது. மருத்துவகல்லூரி தொடங்குவதற்காக இடத்தினை தேர்வு செய்வதிலும் முனைப்பு காட்டப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மருத்துவகல்லூரி தொடங்கும் திட்டம் முடக்கம் அடைந்தது. அறிவிக்கப்பட்டபடி விருதுநகரில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்று பல்வேறு சேவை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் பல முறை வலியுறுத்திய போதும் அத்திட்டம் தொடங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அறிவிப்பு

இந்தநிலையில் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது தென் மாவட்டங்களில் பல் மருத்துவகல்லூரி தொடங்கப்படும் என அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகரில் பல்மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்ததோடு, அதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து விருதுநகர்–சாத்தூர் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத அரசு அலுவலக குடியிருப்பு பகுதியில் பல்மருத்துவ கல்லூரி தொடங்க அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பல் மருத்தவகல்லூரி தொடங்குவதற்கான அரசாணை ஏதும் பிறப்பிக்கப்படாததால் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலை உள்ளது.

கோரிக்கை

இந்த அறிவிப்புக்கு பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டதால் சட்ட கல்லூரி தொடங்குவதற்காக ஒரு உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட விருதுநகர் பல் மருத்துவ கல்லூரிக்கு அரசாணை ஏதும் பிறப்பிக்கப்படாததால் தொடர் நடவடிக்கை தாமதம் ஆகிறது. எனவே தமிழக அரசு விருதுநகரில் பல் மருத்துவகல்லூரி தொடங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு தொடர் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story