ஸ்ரீவில்லிபுத்துர் – பார்த்திபனூர் இடையேயான கிலோ மீட்டர் சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகிறது


ஸ்ரீவில்லிபுத்துர் – பார்த்திபனூர் இடையேயான கிலோ மீட்டர் சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகிறது
x
தினத்தந்தி 8 Jun 2017 3:45 AM IST (Updated: 8 Jun 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர்–பாத்திபனூர் இடையேயான 108 கிலோ மீட்டர் தூர சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகிறது

 

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர்–பாத்திபனூர் இடையேயான 108 கிலோ மீட்டர் தூர சாலையை தேசிய நெடுஞ்சாலையாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பலன் அடைய வாய்ப்பு ஏற்படும்.

குறுகிய சாலை

விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் செல்ல ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வழியாக பார்த்திபனூர் செல்ல வேண்டும். இந்த சாலை நீண்டகாலமாகவே மாநில நெடுஞ்சாலையாகவே உள்ளது. மிகவும் குறுகிய சாலையாக இது இருந்து வந்ததால் வாகன போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இடையில் இந்த சாலையை அழகாபுரியில் இருந்து விருதுநகர் வரை 5 மீட்டராக அகலப்படுத்த மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் விருதுநகரில் இருந்து நரிக்குடி வரை குறுகிய சாலையிலேயே வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து.

கோரிக்கை

இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக ஆக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரப்பட்டு வந்தது. ஆனாலும் மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் செவி சாய்க்க வில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்துக்கு வந்திருந்த மத்திய தரைவழிப்போக்குவரத்து இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர்–பார்த்திபனூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக ஆக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கூறி நடப்பு ஆண்டிலேயே இத்திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இது பற்றி ஆலோசனை நடத்தினார். மேலும் இதற்கான சாத்தியகூறுகள் பற்றி ஆய்வு செய்து நடப்பு ஆண்டிலேயே ஸ்ரீவில்லிபுத்தூர்–பார்த்திபனூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக ஆக்க வேண்டியதற்கான திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இணைப்பு சாலை

ஸ்ரீவில்லிபுத்தூர்–பார்த்திபனூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக ஆக்கப்பட்டால் இந்த சாலை மதுரை–தென்காசி நான்குவழிச்சாலை, மதுரை–கன்னியாகுமரி நான்குவழிச்சாலை, மதுரை–தூத்துக்குடி நான்கு வழிச்சாலை மற்றும் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக அமையும். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் இருந்து ராமேசுஸ்வரம் வரை செல்வதற்கு வாகனங்களுக்கு வசதியாக இருப்பதோடு, மற்ற நான்கு வழிச்சாலைகளிலும் செல்ல வசதி ஏற்படும்.

பயன்பெறுவர்

இதன்மூலம் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பெரும் பயன் அடைய வாய்ப்பு ஏற்படும். தற்போது ராஜபாளையத்தில் இருந்து ராமஸ்சுவரம் செல்லும் போக்குவரத்து கழக பஸ்களின் பயண நேரம் 6 மணி நேரமாக உள்ளது. இதே போன்று மற்ற கனரக வாகனங்களும் ராமநாதபுரம் மாவட்டம் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக ஆக்கப்பட்ட பின் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ராமேஸ்சுவரம் வரை செல்லும் பயணம் நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் விலை பொருட்களையும் அவர்கள் எளிதில் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்படும். எனவே மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தினை எடுக்கும் நிலையில் திட்டப்பணியை விரைந்து முடித்து இந்த சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story