பெங்களூருவில் இந்திய தர மதிப்பீட்டு ஆய்வக பெண் விஞ்ஞானிக்கு கற்பழிப்பு மிரட்டல் சக விஞ்ஞானி கைது


பெங்களூருவில் இந்திய தர மதிப்பீட்டு ஆய்வக பெண் விஞ்ஞானிக்கு கற்பழிப்பு மிரட்டல் சக விஞ்ஞானி கைது
x
தினத்தந்தி 8 Jun 2017 1:39 AM IST (Updated: 8 Jun 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், இந்திய தர மதிப்பீட்டு ஆய்வக பெண் விஞ்ஞானிக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்ததாக அவருடன் பணியாற்றும் சக விஞ்ஞானியை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவில், இந்திய தர மதிப்பீட்டு ஆய்வக பெண் விஞ்ஞானிக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்ததாக அவருடன் பணியாற்றும் சக விஞ்ஞானியை போலீசார் கைது செய்தனர்.

விஞ்ஞானிகள்

பெங்களூரு பீனியா தொழிற்பேட்டையில் இந்திய தர மதிப்பீட்டு ஆய்வகம் உள்ளது. இது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் ஷா விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர் பெங்களூரு கோரமங்களாவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, தன்னுடன் பணி புரிந்து வரும் பெண் விஞ்ஞானியின் அறைக்கு அனுமதியின்றி சென்றார். அப்போது, பெண் விஞ்ஞானி இன்னொரு ஊழியருக்கு சில அறிவுரைகளை கூறிக் கொண்டு இருந்தார்.

இதனால், அறையை விட்டு வெளியே செல்லும்படி பெண் விஞ்ஞானி அவரிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண் விஞ்ஞானி அறையை விட்டு வெளியே சென்றார். இதைத்தொடர்ந்து, விஜய் குமார் ஷாவும் அறையில் இருந்து வெளியேறி பெண் விஞ்ஞானியை பின்தொடர்ந்துள்ளார்.

கைது

மேலும், சக விஞ்ஞானி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பெண் விஞ்ஞானியை அவர் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன், அவர் பெண் விஞ்ஞானிக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் விஞ்ஞானி சம்பவம் குறித்து பீனியா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் குமார் ஷாவை கைது செய்தனர். மேலும், ஆய்வகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, விஜய் குமார் ஷா அடிக்கடி பெண்களிடம் தவறாக பேசுவதுடன், தவறாக நடக்க முயற்சிப்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story