கூடலூர் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பள்ளிக்கூடம் செல்லாமல் பெற்றோருடன் மாணவர்கள் தர்ணா
கூடலூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி பள்ளிக்கூடம் செல்லாமல் மாணவ– மாணவிகள் பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி பள்ளிக்கூடம் செல்லாமல் மாணவ– மாணவிகள் பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மேல்கூடலூரில் மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மதுக்கடை அருகே மாணவர்கள் தர்ணாகூடலூர் தாலுகா பாடந்தொரையில் சாலையோரம் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடை தைதமட்டம் என்ற கிராமத்துக்கு மாற்றப்பட்டது. இதனைதொடர்ந்து குடியிருப்பு பகுதியில் மதுக் கடை உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த மாதம் மதுக்கடையை முற்றுகையிட்டனர். இருப்பினும் அந்த மதுக்கடை அகற்றப்பட வில்லை. இந்த நிலையில் மதுக் கடையை அகற்றாததை கண்டித்து தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புவது இல்லை என வாச்சிக்கொல்லி, கர்க்கப்பாலி, சுண்டவயல், உரியமஞ்சோலை, ஒருமடம், தைதமட்டம், அங்கன்களரி, வேர்கடவு உள்ளிட்ட கிராம மக்கள் அறிவித்தனர்.
அதன்படி நேற்று காலை 11 மணிக்கு கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்ப வில்லை. இதேபோல் குழந்தைகளும் பள்ளிக்கூடம் செல்லாமல் தங்களது பெற்றோருடன் மதுக் கடையை அகற்றக்கோரி, அந்த கடையின் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்– இன்ஸ்பெக்டர் ரகீம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வேறு இடத்துக்கு மாற்றுவதாக உறுதிபின்னர் கிராம மக்கள், பெற்றோர், மாணவ– மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலன் ஏற்பட வில்லை. மதுக்கடையை அகற்றும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக கூறி போலீசார் சிலரை வேனில் ஏற்றினர். அப்போது கிராம மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் சகாதேவன், ராஜேந்திர பிரபு, பிரகாஷ், துயில்மேகம் உள்பட பலர் அங்கு வந்து கோஷமிட்டனர்.
இதையொட்டி வேனில் ஏற்றிய கிராம மக்களை போலீசார் விடுவித்தனர். பின்னர் மதுக் கடை அருகே பள்ளிக்கூட மாணவ– மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் கிராம மக்களுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையொட்டி கலால் உதவி ஆணையர் முருகன் நேரில் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 10 நாட்களுக்குள் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக உறுதி அளித்தார்.
இதை கிராம மக்கள், மாணவ– மாணவிகள் ஏற்று கொண்டனர். பின்னர் பகல் 2 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் மாணவர்கள், பெற்றோரின் போராட்டத்தால் பகல் 12 மணிக்கு திறக்க வேண்டிய மதுக் கடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
நள்ளிரவு முற்றுகை போராட்டம்இதேபோல் கூடலூர் அருகே மேல்கூடலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரி பின்புறம், கிறிஸ்தவ ஆலயம், கோத்தர் இன கோவில் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக்கடை திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடையில் மதுபான பொருட்களை வைக்க அதிகாரிகள் வர இருப்பதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த மேல்கூடலூர், கோக்கால் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சுமார் 150 பேர் மதுபான கடை திறக்க உள்ள இடத்தில் திரண்டனர். பின்னர் கடை திறக்கக்கூடாது என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார், வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எக்காரணத்தை கொண்டும் குடியிருப்பு பகுதியில் மதுபான கடை திறக்க அனுமதி வழங்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டது. இதையொட்டி இரவு 11 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.