திருவள்ளூர், வாலாஜாபாத்தில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள்
திருவள்ளூர், வாலாஜாபாத்தில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர்,
கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ– மாணவிகளுக்கு அரசின் சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள், சீருடை மற்றும் இதர கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன், திருவள்ளூர் ஆர்.டி.ஒ. திவ்யஸ்ரீ, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு விலையில்லா பாடபுத்தகம் போன்றவற்றை மாணவிகளுக்கு வழங்கி பேசினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியக்குப்பம் வரதராஜபுரத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், திருவள்ளூர் தாசில்தார் கார்குழலி, நகராட்சி என்ஜினீயர்
உமாமகேஸ்வரி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வாலாஜாபாத்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சொர்ணலட்சுமி தலைமை தாங்கினார். விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மரகதம் குமரவேல் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் விலையில்லா புத்தகங்கள், சீரூடைகள் உள்ளிட்டவற்றை மாணவிகளுக்கு வழங்கினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ வாலாஜாபாத் கணேசன், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர்கள் வரதராஜுலு, ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story