கோவையில் தொடரும் அட்டகாசம்: ஊருக்குள் புகுந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு


கோவையில் தொடரும் அட்டகாசம்: ஊருக்குள் புகுந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2017 3:30 AM IST (Updated: 8 Jun 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தொடரும் அட்டகாசம்: ஊருக்குள் புகுந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு கும்கி யானை பாரி உதவியுடன் தீவிர ரோந்து பணி

பேரூர்,

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. மேலும் அந்த பகுதியில் கும்கியானை பாரியின் உதவியுடன் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காட்டுயானைகள்

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தற்போது வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக அருகில் இருக்கும் கிராமங்களிலும், குடியிருப்புகளிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காட்டு யானை வெள்ளலூர் பகுதியில் புகுந்து 4 பேரை கொன்றது.

இதேபோல் கடந்த 4–ந்தேதி இரவில் ஒரு காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவைபுதூர் பிரஸ் என் கிளேவ் குடியிருப்புக்குள் புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுத்து அந்த காட்டுயானையை போராடி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

மீண்டும் ஊருக்குள் புகுந்தது

இந்த நிலையில் வனப்பகுதிக்குள் சென்ற காட்டுயானை நேற்று முன்தினம் மீண்டும் தீத்திப்பாளையம் ஊருக்குள் புகுந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து அங்கு கட்டியிருந்த ஆட்டை மிதித்து கொன்றது.

இதையடுத்து அதேபகுதியில் இருந்த மற்றொரு தோட்டத்திற்குள் புகுந்து கன்றுக்குட்டி ஒன்றை மிதித்து கொன்றது. பின்னர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யானையை அங்கிருந்து விரட்டினர். ஆனாலும் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அந்த பகுதியிலேயே சுற்றித்திரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

கும்கி வரவழைக்கப்பட்டது

இதனிடையே அந்த பகுதியில் கோழி வளர்ப்பதற்காக அமைத்திருந்த கூடாரத்தையும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து அதன் அருகே இருந்த வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாட்டை தாக்கியது. இதையடுத்து மாவட்ட வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை அங்கிருந்து விரட்ட முயன்றனர். ஆனால் யானை அந்த பகுதியை விட்டு செல்லவில்லை.

பின்னர் பல மணி நேரம் போராடி வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் அந்த யானை ஊருக்குள் புகாமல் இருக்க சாடி வயலில் இருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டு அய்யாசாமி மலை அடிவாரத்தின் அருகே நாகராஜ் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

தீவிர ரோந்து பணி

மேலும் அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் கும்கியானை பாரி உதவியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:– இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. சமீபத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுயானை ஒன்று 4 பேரை கொன்றது. அதனால் மீண்டும் யானை குடியிருப்பு பகுதியில் புகுந்ததை பார்த்த உடனே பீதி அடைந்தோம். ஆனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. மேலும் வனத்துறையினர் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story