மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் சீதாராம்யெச்சூரியை தாக்க முயன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் சீதாராம்யெச்சூரியை தாக்க முயன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது
x
தினத்தந்தி 7 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-08T02:41:54+05:30)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் சீதாராம்யெச்சூரியை தாக்க முயன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி

திருப்பூர்,

சீதாராம்யெச்சூரியை தாக்க முயன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார்.

ஜி.கே.வாசன்

திருப்பூர் பழவஞ்சிபாளையம், சுண்டைமேடு, ஆண்டிபாளையம், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருப்பூர் வந்தார்.

அவருக்கு, வீரபாண்டி நால்ரோட்டில் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் சிறுமுகை ரவிக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

வன்மையாக கண்டிக்கத்தக்கது

தமிழக அரசியல் சூழலை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்களும், ஆளுங்கட்சியும் இரண்டாக பிரிந்திருக்கிறது. எனவே சட்டமன்ற உறுப்பினர்களின் மனநிலைக்கு ஏற்ப தமிழகத்தில் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மிக முக்கியமான நகரமாக இருந்து வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நகரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் பராமரிப்பு மிக மோசமாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார்களை முன்வைத்து வருகின்றனர்.

இதனால் அரசு மருத்துவமனையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு நல்ல சிகிச்சை கொடுக்க கூடிய நிலையை அரசு சுகாதாரத்துறை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆஸ்பத்திரியில் நீண்ட காலமாக பல்வேறு சிகிச்சைக்கான உபகரணங்கள் இல்லாமல் இருக்கிறது. சுகாதாரத்துறை அதை உடனடியாக வாங்கி கொடுக்க வேண்டும். திருப்பூரில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக விடுத்து வந்த கோரிக்கை, நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மாநகருக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் விபத்துகள் ஏற்படுவதுடன் அதிக சிரமத்தையும் பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் இணைந்து விபத்துகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம்யெச்சூரியை தாக்க முயன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாக்க முயன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story