வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா


வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
x
தினத்தந்தி 8 Jun 2017 4:15 AM IST (Updated: 8 Jun 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பக்தர்கள் பறவை-பால்காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.

சோமரசம்பேட்டை,

திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர். நேற்று தேரோட்டம் நடந்தது. வைகாசி விசாகமான நேற்று காலை நடராஜர் தரிசனம் நடந்தது.

அதன்பிறகு விசாக நட்சத்திரத்தில் கோவில் சக்தி தீர்த்த குளக்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தி பரவசத்துடன் பக்தர்கள்...

மேலும் திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற பக்தி பரவசத்துடன் பறவை மற்றும்

பால்காவடிகள் எடுத்தும், அலகுகள் குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சுப்பிரமணியசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி வெள்ளி கவச அலங்காரத்துடன், வெள்ளி விமானத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடந்தது.

இன்று (வியாழக்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Related Tags :
Next Story