டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 4:30 AM IST (Updated: 8 Jun 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த மணக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் பாப்பாத்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா, ஒன்றிய செயலாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய குழுவை சேர்ந்த பாப்பாத்தி, விஜயா, அமராவதி, சேப்பாத்தாள், கோமதி, நித்தியா, இந்திரா, ராசம்மாள், ஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மண்டல துணை தாசில்தார் ரமேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் (பொறுப்பு), டாஸ்மாக் உதவி மேலாளர் வேம்பு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் மணக்குடி டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும். தமிழக அரசு உடனே பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் எடுத்து கூறினர். பேச்சுவார்த்தையில் 30 நாட்களில் டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Tags :
Next Story