விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை: வானூரில் 60 மி.மீ. பதிவானது
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக வானூரில் 60 மி.மீ. பதிவானது
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிகபட்சமாக வானூரில் 60 மி.மீ. மழை பதிவானது.
பரவலாக மழைவிழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் கடந்த ஒரு வார காலமாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும் மாலையில் அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்வதுமாக இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் ஓரிரு நாளில் தொடங்க உள்ளதால் பல இடங்களில் இப்போதே பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் ஆங்காங்கே சாரல் மழை பெய்து பூமியை குளிர்வித்தது.
விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. இரவு 7 மணியளவில் வெப்ப சலனம் காரணமாக திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 15 நிமிடமாக தூறிக்கொண்டே இருந்தது.
பின்னர் இரவு 10 மணிக்கு மீண்டும் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரமாக தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலையில் மழைநீர் வழிந்தோடியது. தொடர்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்த சாரல் மழை நேற்று அதிகாலை வரை தூறிக்கொண்டே இருந்தது.
இதேபோல் நேற்று காலையும் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவ–மாணவிகள் குடைபிடித்தபடி நடந்து சென்றனர்.
அங்கன்வாடி மையத்துக்குள் மழைநீர் புகுந்ததுமரக்காணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நள்ளிரவு 1 மணி வரை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஓமிப்பேர் கிராமத்தில் 6 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் ஓமிப்பேர் அங்கன்வாடி மையத்துக்குள் மழைநீர் புகுந்ததால், உணவு தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தண்ணீரில் நனைந்து வீனானது. நேற்று காலை அங்கன்வாடி மையத்துக்கு வந்த பணியாளர்கள், கட்டிடத்தில் தேங்கி நின்ற தண்ணீரை அகற்றினர்.
இதேபோல் திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், மேல்மலையனூர், கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசுவதால், கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–
வானூர்– 60
மரக்காணம்– 55
செஞ்சி– 20
கள்ளக்குறிச்சி– 19
திண்டிவனம்– 18
விழுப்புரம்– 8
உளுந்தூர்பேட்டை– 8
திருக்கோவிலூர்– 7.50
சங்கராபுரம்– 1
மொத்த மழை அளவு– 196.50 மி.மீ.
சராசரி– 21.83 மி.மீ.