தேனியில், குடும்ப தகராறில் தொழிலாளி குத்திக்கொலை; தந்தை கைது


தேனியில், குடும்ப தகராறில் தொழிலாளி குத்திக்கொலை; தந்தை கைது
x
தினத்தந்தி 7 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-08T03:18:42+05:30)

தேனியில், குடும்ப தகராறில் கூலித்தொழிலாளியை அவருடைய தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்தார்.

தேனி,

தேனியில், குடும்ப தகராறில் கூலித்தொழிலாளியை அவருடைய தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

கூலித்தொழிலாளி கொலை

தேனி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவருடைய மகன் முத்துப்பாண்டி (37). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஜக்கம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். முத்துப்பாண்டியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவருடைய மனைவி ஜக்கம்மாள் பிரிந்து தனியாக வாழ்கிறார். மகள்கள் 3 பேரும் ஜக்கம்மாளிடம் வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், முத்துப்பாண்டி மது குடித்துவிட்டு அடிக்கடி தனது தந்தை முருகனிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த முருகனுக்கும், முத்துப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த முருகன் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முத்துப்பாண்டியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரின் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

தந்தை கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் முத்துப்பாண்டியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகனை கொலை செய்த முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தையின் உடலை பார்த்து கதறிய மகள்கள்

கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டியின் 3 மகள்களும் தேனியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். நேற்று பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் நாள் என்பதால் பலவித கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கூடம் சென்ற சில நிமிடங்களில், உறவினர்கள் சிலர் அங்கு வந்து அவருடைய தந்தை கொலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த 3 மாணவிகளும் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் தங்களின் தந்தை உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.


Next Story