எல்லையை நிர்ணயிப்பதில் பிரச்சினை: கம்பம்மெட்டு பகுதியில் நில அளவை பணி தொடக்கம்
எல்லையை நிர்ணயிப்பதில் பிரச்சினை: கம்பம்மெட்டு பகுதியில் நில அளவை பணி தொடக்கம் இரு மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்
கம்பம்,
எல்லையை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கம்பம்மெட்டு பகுதியில் தமிழக, கேரள அதிகாரிகள் நில அளவை பணியை தொடங்கினர்.
அத்துமீறி நுழைந்தனர்தமிழக–கேரள எல்லைப்பகுதியாக கம்பம்மெட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லைப்பகுதிக்குள் கேரள கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் சோதனை சாவடி அருகே கன்டெய்னர் மூலம் அலுவலகம் போல் அமைத்தனர். இதற்கு தமிழக வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே அங்கு வந்த கேரள போலீசார் தமிழக வனத்துறையினரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழக வனத்துறையினர் கம்பம்மெட்டு போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து இருமாநில போலீசாரும் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தமிழக–கேரள எல்லைப்பகுதியை தீர்மானிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம், கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலதாமதம்அப்போது மே மாதம் 30–ந்தேதி இரு மாநில அதிகாரிகளும் கூட்டாக இணைந்து இருமாநிலங்களின் எல்லைப்பகுதியில் நில அளவை பணி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு தரப்பினரும் தங்கள் எல்லைப்பகுதியை நிர்ணயிக்கும் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை சேகரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே தமிழக எல்லைப்பகுதியில் இருந்த கன்டெய்னர் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் இரு மாநிலங்களின் எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பான நில அளவை பணியை ஜூன் 7–ந்தேதி (அதாவது நேற்று) நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளும் நேற்று கம்பம்மெட்டு பகுதிக்கு வந்தனர்.
நில அளவை பணிபின்னர் தமிழக–கேரள அதிகாரிகள் நில அளவை பணியை தொடங்கினர். இதில் தமிழகம் சார்பில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தாசில்தார் குமார், மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் சாந்தி, நில அளவை ஆய்வாளர் சேரலாதன், மாவட்ட வனத்துறை உதவி பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கேரளா சார்பில் தேவிகுளம் சப்–கலெக்டர் ஸ்ரீவெங்கட்ராம், உடும்பன்சோலை தாசில்தார் பானுகுமார், தலைமை சர்வேயர் ஜெயச்சந்திரன், கம்பம்மெட்டு சோதனை சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சனீஸ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதற்கட்டமாக கம்பம்மெட்டு அருகே உள்ள மந்திப்பாறை நாவல்பள்ளம் என்ற இடத்தில் இருந்து நில அளவை பணிகளை இரு மாநில அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நிலங்கள் ஏக்கர் கணக்கில் கேரளாவை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தமிழக எல்லைப்பகுதியை அடையாளம் காணும் வகையில் கல் நட்டு வைக்க வேண்டும் என தமிழக அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
வரைபடங்களில் குறித்தனர்இதற்கு கேரள அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், ஏற்கனவே உள்ள வரைபடங்களில் குறிப்பிட்டுள்ள எல்லைப்பகுதியில் கல் நடப்பட்டிருக்கும். அதனை கண்டறிந்து குறித்து வைத்துக்கொள்வோம். பின்னர் இருமாநில எல்லைப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதும் அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அதன் பின்னர் அந்த இடத்தில் புதிதாக கல் நட்டு வைக்கலாம் என்றனர்.
அதைத்தொடர்ந்து இருமாநில அதிகாரிகளும் வரைபடத்தை பயன்படுத்தி தங்கள் மாநில எல்லைப்பகுதிகளை குறித்துக்கொண்டனர். மேலும் ஜி.பி.எஸ். கருவியை பயன்படுத்தி தங்கள் எல்லைப்பகுதியில் நடப்பட்டுள்ள கல்லையும் கண்டறிந்து பதிவு செய்தனர். மந்திப்பாறை நாவல்பள்ளம் பகுதியில் நில அளவை பணி முடிந்ததும் ராமக்கல்மெட்டு பகுதியில் நில அளவை பணி மேற்கொள்ளப்படும் என்று இருமாநில அதிகாரிகள் தெரிவித்தனர். நில அளவை பணியின் போது கம்பம்மெட்டு சோதனை சாவடி பகுதியில் இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.