10–ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் மாநில கல்வி வாரிய சேர்மன் தகவல்
மராட்டியத்தில் 10–ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று மாநில கல்வி வாரிய சேர்மன் கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் 10–ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று மாநில கல்வி வாரிய சேர்மன் கூறினார்.
10–ம் வகுப்பு தேர்வுமராட்டியத்தில் சென்ற மார்ச் மாதம் எஸ்.எஸ்.சி. எனப்படும் 10–ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 728 மையங்களில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதி இருக்கிறார்கள்.
அண்மையில் 12–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வு எழுதி உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோரும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
தேதி நாளை வெளியாகும்12–ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகுவதற்கு முன்னர் பரவியது போல 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. இதை மாணவர்கள் நம்பவேண்டாம் என மாநில கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து மாநில கல்வி வாரிய சேர்மன் கங்காதர் மாஹ்மானே தெரிவிக்கையில், ‘10–ம் வகுப்பு தேர்வு முடிவு தொடர்பாக மாணவர்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம்.
தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி வருகிற 9–ந்தேதி (அதாவது நாளை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார்.