புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு
புதுவையில் உள்ள 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க.வில் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் புதுவை மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்தித்து தங்கள்ஆதரவை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இருந்தபோதிலும் புதுவை மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரே கருத்துடன் அதாவது சசிகலாவுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். இந்தநிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான டி.டி.வி. தினகரன் தற்போது ஜாமீனில் வெளியே வந்தார்.
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு
அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தனித்தனி குழுவாக சென்று சந்தித்து பேசி வருகின்றனர். புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா, ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், ‘அ.தி.மு.க.வில் பிளவு இல்லை. கட்சியை பொறுத்தவரை பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் தலைமையில் தான் புதுவை மாநில அ.தி.மு.க. இயங்குகிறது. இதன் அடிப்படையில் 4 எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி. தினகரனுக்கு முழு ஆதரவை தெரிவிக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story