சேலம் அருகே பஸ்சில் சிறுமி கற்பழிப்பு: மேலும் ஒரு கண்டக்டர் கைது
சேலம் அருகே பஸ்சில் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு கண்டக்டரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்,
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளையம் கிராமத்துக்கு தினமும் ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 31), டிரைவராகவும், வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் (22) கண்டக்டராகவும் இருந்தனர். மேலும், மாற்று டிரைவராக சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியை சேர்ந்த முருகன் (35) என்பவரும் இருந்தார்.
இந்தநிலையில், கடந்த 5-ந் தேதி இரவில் வழக்கம்போல் சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து நாரணம்பாளையத்திற்கு தனியார் பஸ் புறப்பட்டது. பின்னர், இரவு 10 மணியளவில் பஸ் நாரணம்பாளையத்தை வந்தடைந்ததும் பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றனர். ஆனால் சேலம் அழகாபுரத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி மட்டும் பஸ்சில் இருந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியை, பஸ் டிரைவர் மணிவண்ணன், கண்டக்டர் பெருமாள், மற்றொரு டிரைவர் முருகன் ஆகியோர் பஸ்சில் வைத்து கற்பழித்துள்ளனர்.
3 பேர் கைது
இதையடுத்து 3 பேரின் பிடியில் இருந்து சிறுமி தப்பிஓடி, ஊருக்கு சென்று நடந்த விவரத்தை அங்கிருந்த பொதுமக்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஊர் பொதுமக்கள் உடனடியாக அங்கு வந்து பஸ் டிரைவர் மணிவண்ணன் உள்பட 3 பேரையும் பிடித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தி சிறுமியை மிரட்டி கற்பழித்ததாக மணிவண்ணன், பெருமாள், முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் ஒரு கண்டக்டர் கைது
இதனிடையே, சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் இன்னொரு பஸ் கண்டக்டர் விஜய் (22) என்பவரை ஓமலூர் போலீசார் நேற்று கைது செய்தனர். வீராணம் பகுதியை சேர்ந்த இவர், பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்ஷன் வரை செல்லும் பஸ்சில் கண்டக்டராக உள்ளார். இவருக்கும், கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாரணம்பாளையம் செல்லும் தனியார் பஸ் கண்டக்டர் பெருமாளுக்கு அந்த சிறுமியை விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ளதும், அதன்பேரில் அந்த சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று நினைத்த பெருமாள், உடன் பணிபுரியும் டிரைவர்கள் மணிவண்ணன், முருகனிடம் விவரத்தை எடுத்து கூறியுள்ளதும், அந்த வகையில் ஏற்கனவே திட்டமிட்டபடி நாரணம்பாளையத்தில் வைத்து பஸ்சில் அந்த சிறுமியை 3 பேரும் கற்பழித்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
அதன்பேரில், 15 வயது சிறுமி என்று பாராமல் அவரை கற்பழிப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்காக வீராணத்தை சேர்ந்த கண்டக்டர் விஜய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மணிவண்ணன், பெருமாள், முருகன், விஜய் ஆகிய 4 பேரையும் நேற்று மாலை சேலம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பிறகு அவர்களை வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி விஜயலட்சுமி உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட பஸ் கண்டக்டர் பெருமாள் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதன் விவரம் வருமாறு:-
நான் சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து நாரணம்பாளையம் வரை செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறேன். வீராணத்தை சேர்ந்த விஜய், எனது நண்பர். இவர், இன்னொரு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். அவர் தான் சிறுமியை எனக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பழைய பஸ் நிலையத்தில் வைத்து அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது சிறுமி எனது செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டார். அன்றே எங்களது பஸ்சில் ஏறி ஜங்ஷன் வரை வந்தார். பிறகு மறுநாள் திங்கட்கிழமை காலையில் எனக்கு போன் செய்தார். பிறகு பழைய பஸ் நிலையத்தில் இருந்து எங்கள் பஸ்சில் ஏறினார். அன்று முழுவதும் பஸ்சிலேயே இருந்தார். அன்று இரவு சிறுமிக்கு சாப்பாடு வாங்கி கொண்டு நாரணம்பாளையத்திற்கு சென்றோம்.
அங்கு தான் இரவில் வண்டியை நிறுத்துவோம். அப்போது, 2 டிரைவர், நான், சிறுமி என 4 பேரும் சேர்ந்து சாப்பிட்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு நான் (பெருமாள்) சிறுமியை கற்பழித்தேன். அதன்பிறகு மணிவண்ணனும், அதைத்தொடர்ந்து முருகனும் கற்பழித்தனர். அப்போது, சிறுமி முரண்டு பிடித்துக்கொண்டு, பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். அந்த நேரம், அவரது சத்தம் கேட்டு ஊர் மக்கள் வந்து எங்களை பிடித்துவிட்டனர், என வாக்குமூலத்தில் பெருமாள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story