ஊட்டியில் தொடர் மழை பெய்தாலும் மலை ரெயிலில் பயணம் செய்ய குவியும் சுற்றுலா பயணிகள்


ஊட்டியில் தொடர் மழை பெய்தாலும் மலை ரெயிலில் பயணம் செய்ய குவியும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 9 Jun 2017 3:45 AM IST (Updated: 9 Jun 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தொடர் மழை பெய்தாலும், மலை ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஊட்டி,

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்ல ஆரம்ப காலக்கட்டத்தில் மலைரெயிலை மட்டுமே பொதுமக்கள் அதிகளவு நம்பி இருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மலை ரெயில் தற்போதும் சிறப்பாக இயங்கி வருகிறது. 46.61 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரெயில்பாதை உள்ளது. இதில் மொத்தம் 212 வளைவுகள் உள்ளன. மேலும் 16 குகைகளும், 31 பெரிய பாலங்களும், 219 சிறிய பாலங்களும் உள்ளன.
இந்த மலை ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு ஊட்டியை வந்தடைகிறது. பின்னர் மதியம் 2 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்று அடைகிறது. இதுதவிர ஊட்டி-குன்னூர் இடையே பயணிகள் ரெயில் காலை முதல் மாலை வரை இயக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகள் ஆர்வம்

தற்போது ஊட்டியில் கோடை சீசன் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்தாலும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ஊட்டி மலைரெயிலில் பயணம் செய்ய குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மலை ரெயிலில் பயணம் செய்தனர். மலைரெயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் ஊட்டியின் அழகிய இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். குகைகள் மற்றும் பாலங்கள் வழியாக பயணம் செய்யும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

தாவரவியல் பூங்கா

கடந்த மாதம் கோடை சீசனையொட்டி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது. அப்போது அங்குள்ள மலர் மாடங்களில் மேரிகோல்டு, பால்சம், துலிப் உள்ளிட்ட மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காரணமாக பெரணி கண்ணாடி மாளிகை அருகே உள்ள புல்வெளி பகுதி சேதமடைந்தது.

தற்போது கோடை சீசன் முடிந்து விட்டதாலும், தொடர் மழை பெய்து வருவதாலும் மலர் மாடங்கள் மற்றும் கண்ணாடி மாளிகைகளுக்கு செல்லும் வழியில் உள்ள புல்வெளி பகுதி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று விடாமல் இருக்க சுற்றிலும் கயிறு கட்டப்பட்டு உள்ளது. புல்வெளி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story