பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் போராட்டம்
பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையை அகற்ற...நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி பஞ்சாயத்தில் கடந்த ஜனவரி மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், திப்பணம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கடந்த 1–ந் தேதி முதல் டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் கடை அருகில் பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 7–வது நாளான நேற்று முன்தினம் பெண்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டனர். அத்துடன் மதுவினால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வு வில்லிசை கலைநிகழ்ச்சியும் நடத்தினர்.
கருப்பு துணி கட்டி போராட்டம்நேற்று 8–வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. இதில் ஆண்கள், பெண்கள் என கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் வாயில் கருப்பு துணி கட்டி இருந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அமர்ந்து இருந்த பெண்கள், வாயில் கருப்பு துணி கட்டியபடி பீடி சுற்றினர். மதுபாட்டில்களை தூக்கில் கட்டி தொங்கவிட்டு இருந்தனர்.
இங்குள்ள டாஸ்மாக் கடையை திறக்க விட மாட்டோம். டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.