நெல்லை அருகே ஜாமீனில் வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை சாவுக்கு போலீசாரே காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்ததால் பரபரப்பு


நெல்லை அருகே ஜாமீனில் வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை சாவுக்கு போலீசாரே காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 2:00 AM IST (Updated: 9 Jun 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ஜாமீனில் வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை,

நெல்லை அருகே ஜாமீனில் வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு போலீசாரே காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயி

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் கீழசெவல் நயினார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 60) விவசாயி. இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், ஜெயவேல் என்ற மகனும், குமாரி, செல்லக்குட்டி என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் ஜெயவேல் மும்பையில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பாலகிருஷ்ணனும், வெண்ணிலாவும் நயினார்குளம் கிராமத்தில் வசித்து வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் தன்னுடைய நிலத்தை, சுத்தமல்லி திருவள்ளுவர் நகரை சேர்ந்த முத்துராமலிங்கம், வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த மாணிக்கராஜ் ஆகியோருக்கு விற்பனை செய்வதற்கு அட்வான்ஸ் வாங்கினார். முன்பணம் கொடுத்தவர்கள் 3 மாதத்தில் மீது பணத்தை கொடுத்து விட்டு பத்திரத்தை முடித்துக் கொள்வதாக கூறினர். அதன்பிறகு அவர்கள் இருவரும் மீதி பணத்தையும் கொடுக்கவில்லை. பத்திரம் முடிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

கைது

இதற்கிடையே தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு முத்துராமலிங்கம், மாணிக்கராஜ் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணனிடம் கேட்டனர். அதற்கு அவர், மீதி பணத்தை கொடுத்து விட்டு பத்திரம் முடித்துக் கொள்ளுங்கள். மாறாக அட்வான்சை திருப்பி கொடுக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து முத்துராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29–ந் தேதி பாலகிருஷ்ணனை கைது செய்தார். பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஜாமீனில் வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் இரவில் வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்ற பாலகிருஷ்ணன் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு மரத்தில் பாலகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றினர்.

சாவுக்கு போலீசாரே காரணம்

அப்போது அவர் அணிந்து இருந்த சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதம் கோபாலசமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரிக்கு எழுதப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தில், “கோபாலசமுத்திரம் கிராம நிர்வாகி அறிவது, என்னுடைய சாவிற்கு காரணம் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சுத்தமல்லி திருவள்ளுவர் நகர் முத்துராமலிங்கம், வீரமாணிக்கபுரம் மாணிக்கராஜ் ஆகிய 3 பேரும்தான். வேறு யாரும் இல்லை“ என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் கடிதத்தின் கீழே இப்படிக்கு என்று எழுதப்பட்டு ஆங்கிலத்தில் பாலகிருஷ்ணன் என்று கையெழுத்திட்டு, 7–6–17 என்று தேதியும் குறிப்பிட்டு இருந்தது.

கிராம மக்கள் போராட்டம்

பாலகிருஷ்ணன் உடலை போலீசார் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல முயன்றனர். இதை அறிந்த கிராம மக்கள் போலீசாரை தடுத்து நிறுத்தினர். பாலகிருஷ்ணன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பாலகிருஷ்ணன் உடலை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனது சாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் என்று காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story