திருவொற்றியூரில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
திருவொற்றியூரில் மீனவ கிராமங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருவொற்றியூர்,
சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், ராட்சத குழாய்கள் மூலமாக காசிமேடு, திருவொற்றியூர், சத்தியமூர்த்திநகர், ராமகிருஷ்ணா நகர் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் வழியாக மணலியில் உள்ள மத்திய அரசின் சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
குழாய் பதிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாக்குவாதம் – போலீஸ் குவிப்பு
இந்தநிலையில் திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் சி.பி.சி.எல் நிறுவன பொது மேலாளர் புருஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதனை அறிந்த மீனவ கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கூடுதல் கமிஷனர் ஜெயராமன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மீனவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
ஆனால் அவர்கள் கடற்கரை சாலையில் நின்றவாறு ஆர்ப்பாட்டம் செய்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பூமி பூஜை முடிந்து அப்பகுதியில் ராட்சத குழாய் பதிக்கும் பணி தொடங்கியது. மீனவ கிராம மக்களிடம் அதிகாரிகள் மீனவ கிராமங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 15 மீட்டர் ஆழத்தில் எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினர்.
அப்போது மீனவ கிராம மக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story