ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது


ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2017 10:30 PM GMT (Updated: 8 Jun 2017 7:54 PM GMT)

ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சின்ன பொம்மசனப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 44). இவர் தனக்கு பாலனப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து தரக்கோரி விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த கலந்தாய்வில் அவருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை பெற அவர் வேப்பனப்பள்ளியில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த கண்காணிப்பாளர் பிரகாஷ் (45), ரூ.8 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் பணியிட மாற்றத்திற்கான உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார்.

கண்காணிப்பாளர் கைது

லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத ஆசிரியர் பாலகிருஷ்ணன் இதுகுறித்து கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஆசிரியர் பாலகிருஷ்ணன் நேற்று காலை உதவி தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பிரகாசிடம் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கண்காணிப்பாளர் பிரகாசை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசேகரன் விசாரணை நடத்தினார். பணியிட மாற்றத்திற்கான உத்தரவை வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக உதவி தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story