ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்ம மரணம் கர்நாடக சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்


ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்ம மரணம் கர்நாடக சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 8:45 PM GMT (Updated: 2017-06-09T02:15:44+05:30)

ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்ம மரணம் குறித்து பா.ஜனதா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததால், சட்டசபையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்ம மரணம் குறித்து பா.ஜனதா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததால், சட்டசபையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.

ஒத்திவைப்பு தீர்மானம்

இந்த தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை 11.40 மணியளவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து நின்று, ஐ.ஏ.எஸ். அதிகாரி அனுராக் திவாரி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும்“ என்றார்.

ஜெகதீஷ் ஷெட்டர் கொண்டு வந்த இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் கே.பி.கோலிவாட் நிராகரித்தார். அவர் கூறுகையில், “அனுராக் திவாரி சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இதுபற்றி இங்கு விவாதிக்க அனுமதிக்கமாட்டேன். எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிக்கிறேன்” என்றார்.

நேர்மையான அதிகாரியாக...

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஜெகதீஷ் ஷெட்டர், “பல வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் இந்த சபையில் அதுபற்றி விவாதம் நடந்த வரலாறு இருக்கிறது. எனவே, கண்டிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அனுராக் திவாரி மர்ம சாவு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். அவர் ஒரு நேர்மையான அதிகாரி. அவரது சாவில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து விவாதம் நடத்த அரசு பயப்படுவது ஏன்? இதை பார்க்கும்போது இந்த அரசு ஏதோ உண்மைகளை மறைப்பது போல் தெரிகிறது. இந்த விவகாரத்தில் இந்த அரசை குறை கூற வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. இதில் மாநில அரசுக்கு தொடர்பு உள்ளது என்று நாங்கள் சொல்லவில்லை.

அதிகாரி அனுராக் திவாரியின் குடும்பத்தினர் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். அவர்களை முதல்-மந்திரி அழைத்து பேசி இருக்க வேண்டும். அதை சித்தராமையா செய்யவில்லை. இது சரியல்ல. ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் இல்லாவிட்டாலும் வேறு வடிவத்தில் இந்த விவாதத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

இருக்கைக்கு திரும்பினர்

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சபா நாயகர், “அனுராக் திவாரி மரணம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்குகிறேன். நீங்கள் இருக்கைக்கு திரும்புங்கள்” என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவை வாபஸ் பெற்று தங்களது இருக்கைக்கு திரும்பினர்.

Next Story